மாளிகைக்காடு நிருபர்
கல்முனை மாநகர சபை ஊழலை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதனை பொறுப்பேற்று கல்முனை மாநகர சபை மேயரும், பிரதி மேயரும் பதவி விலகுவதன் மூலமே நேர்மையான விசாரணையை காண முடியும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்று அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த கோட்டா ஆட்சியில் ஊழல் நடந்த போது மஹிந்த, கோட்டா பொறுப்பல்ல, நிர்வாக உத்தியோகத்தர்கள்தான் பொறுப்பு என யாரும் சொல்லவில்லை.
மாறாக அவரின் கட்சி, அவரின் கட்சிக்கு பாராளுமன்றில் ஆதரவு கொடுத்த கட்சிகள் என அனைவரையும் நம் சமூகமும் சேர்ந்து குற்றம் சுமத்தியது.
கல்முனை மாநகர சபையில் நடந்த கொள்ளைக்கு முஸ்லிம் காங்கிரஸ் காரணமில்லை என சிலர் கூறுவது ஊழலுக்கு ஆதரவானதாகும்.
மஹிந்த கோட்டா ஆட்சியில் நடந்த கொள்ளைக்கு மஹிந்த கட்சியும் அவரது கட்சிக்கு பாராளுமன்றில் ஆதரித்த அனைத்து கட்சிகளுக்கும் கொள்ளையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குண்டு.
அதே போல் கல்முனை மாநகரசபை கொள்ளையில் ஹக்கீமுக்கும் அவரது கட்சிக்கும் அக்கட்சியின் ஆட்சிக்கு ஒத்துழைத்த கட்சிகள், சுயேற்சைகளுக்கும் பங்குண்டு என்பதே உண்மை.
அதே போல் இப்பிரச்சினையை சிவில் அமைப்புக்களால் மட்டும் தீர்க்க முடியாது.
சிவில் அமைப்புக்கள் சாதித்தது எதுவும் இல்லை. கடைசியில் பண பலம் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விலை போவார்கள்.
கல்முனை ஊழலை அரசியல் மயப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம் காங்கிரஸினர் பயப்படுவார்கள்.
அல்லாமல் சிவில் மயப்படுத்தினால் போதும் என்றிருந்தால் இப்பிரச்சினையை கல்முனையை ஆள்வோர் கணக்கே எடுக்க மாட்டார்கள்.
காரணம்: சிவில் இயக்கம் என்றால் தேர்தல் வந்ததும் பண பலம் படைத்த கட்சிகளுக்கு விலை போவார்கள், அல்லது ஊழல் கட்சிகளுக்கெதிராக தேர்தலில் நடுநிலை என ஏமாற்றிக்கொண்டு பேசாமல் மௌனமாக இருப்பர் என்பது முஸ்லிம் காங்கிரஸினருக்கும் ஏனைய ஏமாற்று கட்சிகளுக்கும் நன்கு தெரியும்.
ஆகவே கல்முனை மக்கள் இந்த ஊழலுக்கெதிராக ஜனநாயக ரீதியில் கல்முனையில் ஆர்ப்பாட்டம் செய்து இப்பிரச்சினையை தேசிய மயப்படுத்துமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.