வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை
** வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக செயற்படும்
** மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல்
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்று (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வங்கித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு தடங்கல் ஏற்படாத வகையிலும் வங்கிச் செயல்பாடுகளை பேணுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் வங்கிக் கட்டமைப்பு செயலிழந்தது என்ற செய்தி, சர்வதேச சமூகத்திற்கு செல்வது, நாட்டுக்கு நல்லதொரு நிலைமை அல்ல எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் சந்தர்ப்பத்தில் சாவியை வழங்குதல், தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்களின் சாவியை கையளித்தல் போன்ற ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிடுவது வழமையான மரபு என்றாலும் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஒன்றிணைந்த வங்கித் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அவ்வாறானதொன்றும் இடம்பெறவில்லை என இந்தக் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
அதன்படி, வங்கித் தலைவர்கள் தலைமையிலான உயர் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க ஒப்புக்கொண்டது.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு வங்கிக் கட்டமைப்பின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும், நாட்டிற்கான அவர்களின் பொறுப்பை தட்டிக்கழிக்க வேண்டாம் என்றும் அனைத்து வங்கி ஊழியர்களையும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, வரி அறவீடு தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முழு நாடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த உதவுவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாடு இப்போது மிகவும் கடினமான பொருளாதார நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இலங்கை வங்கியின் தலைவர் என்ற வகையில், எமது ஊழியர்களை நாளை பணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் எமது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி சிறந்த சேவையை வழங்குகிறது. ஒரு நாள் கூட வங்கி மூடப்பட்டால், நாடு முழுவதும் பெரும் அசௌகரியம் ஏற்படும்.
மேலும், வரி வசூலிப்பு மற்றும் வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். இந்தப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறோம். வங்கி மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் சார்பாக பணிக்கு வருமாறு எங்கள் உழியர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை வேலைநிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறோம். மக்கள் வங்கி என்ற ரீதியில், மக்கள் வங்கியின் ஊழியர்கள் என்ற ரீதியில் முறையாக கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மக்கள் வங்கி பெரும் பங்களிப்பை வழங்குகிறது. நாங்கள் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்குகிறோம். எனவேதான், வழமை போல் பணியில் சேர்ந்து, சேவையைப் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நேரத்தில், அரசாங்கத்திற்கோ நாட்டுக்கோ அல்லது பொருளாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படுமு; வகையில் செயற்படக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு