(அபு அலா)
18 வயதுக்குட்பட்ட பால்நிலையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இல்லத்து வன்முறையினால் மன உளைச்சலுக்கு உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கிறது.
அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பதற்கான பல முயற்சினை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று திருமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் (திருமதி) பிரசாந்தினி உதயகுமார் தெரிவித்தார்.
உளவளம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாவட்ட உளவள நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) துளசிபுர நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் கலந்துகொண்ட அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்தில் குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கிடையிலான அதிகார வேறுபாடே பால்நிலை சார் வன்முறைக்கான அடிப்படைக் காரணமாகும்.
இது தவிர சமுக, மத, பண்பாட்டுக் காரணிகள், தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தைகள், பொருளாதாரக் காரணிகள், பலவீனத்தன்மை உள்ளிட்ட சூழ்நிலை சார் காரணிகளாலும் இந்நிலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலைமையிலிருந்து அவர்களை பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் நேக்கிலேயே இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதில் பாதிக்கப்பட்ட பெண்களை துரிதமா அவர்களின் துயரிலிருந்து இலகு வழியில் வெளியே கொண்டு வருவதற்காக திருகோணமலை மாவட்ட 7 பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கடமையாற்றும் இதுதொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் ஒருமித்த பங்குதாரர்களாக பணியாற்றும்போதே, சிறந்த மாற்றத்தை உருவாக்குவதுடன், ஏனையவர்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களையும் வாழவைக்க முடியும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் (திருமதி) ஹயானி ஜெயவர்த்தன, மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பொறுப்பு வைத்தியர், திருமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் உத்தியோகத்தர்கள், திருகோணமலை மாவட்ட 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.