மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (03) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
மாவட்டத்தின் பிரதான உற்பத்தி மற்றும் விளைதிறன், ஆளணி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, கைத்தொழில், காலநிலை மற்றும் சுற்றாடல் ஆகிய 5 பிரிவுகளில் முதலீடு செய்வதற்கான இணக்கப்பாடுகள் இதன்போது எட்டப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் பா.சிவபிரகாசம் தலைமையிலான மாவட்ட அபிவிருத்தி திட்ட துறைசார் ஆலோசனைக் குழுவினர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் திட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்டத்தின் சகல திணைக்களங்களினதும் பதவி நிலை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.