மனித பாவனைக்கு தகுதியற்ற, காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன், இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் தயாரிக்கப்பட்ட கனோலா சமையல் எண்ணெய் என்ற போர்வையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 51,600 லிட்டர் பாவனைக்கு உதவாத எண்ணெய் சிக்கியது.
ரிதிகம பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ரிதிகம, பனகமுவ, அன்னூர்புர பகுதியில் அமைந்துள்ள தேங்காய் எண்ணெய் களஞ்சியசாலையை சுற்றிவளைத்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது, எண்ணெய்க் கிடங்கில் தலா பத்து லிட்டர் கொண்ட 5,160 கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது சோப்பு உற்பத்திக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக கைது செய்யப்பட்ட எண்ணெய் சேமிப்பகத்திற்கு பொறுப்பான வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் கேன்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும் ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் வர்த்தகர் சுட்டிக்காட்டியதாக சோதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணெய் களஞ்சியசாலைக்கு சீல் வைத்து மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு ரம்பதகல்ல நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.