ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
நினைவு புத்தகத்தில் குறிப்பிட்ட ஜனாதிபதி
மல்வத்து மகா விகாரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றை இடுவதற்கும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மறக்கவில்லை.
அதனையடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அஸ்கிரி மகா விகாரையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, அஸ்கிரி மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள்.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.