ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளேன்
அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், நாடாளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்ற அடிப்படையில் தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த நான் கட்டுப்பட்டுள்ளேன்.
அந்தவகையில் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டம் கடந்த 37 ஆண்டுகளாக எமது சட்டப் புத்தகத்திலும் அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து, 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும். அப்படி இல்லையெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமலும், நீக்காமலும் எமக்கு இவற்றுக்கிடையே நிற்க முடியாது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறுக் கோரி நாடாளுமன்றத்தில் யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும்.
அதற்குப் பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தால் என்ன செய்வது? அப்படியானால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நேரிடும்.
நான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்புக்கமையவே செயற்படுகின்றேன்.
விசேடமாக பிரதம நீதியரசர் பாலிந்த ரணசிங்கவின் தீர்ப்பிற்கமையவே செயற்படுகிறேன்.
இதனை வரையறுத்துப் பார்த்தால், நாம் ஒற்றையாட்சியில் இருக்கின்றோம். நான் பெடரல் ஆட்சி முறையை எதிர்கின்றேன்.
ஆனால் அதிகாரங்களைப் பகிரத் தயார். எமது மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட இல்லை.
லண்டன் நகர சபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை சமஷ்டி இராச்சியம் எனக் கூறமுடியாது.
இதனை சமஷ்டி இராச்சியமாவதைத் தவிர்க்க, ஜே.ஆர் ஜயவர்தன சட்டத்தரணிகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இதுவரை நாட்டில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே தீர்மானித்தனர்.
இதனை இனிமேலும் நடைமுறைப்படுத்தவில்லையெனில், நாம் அதனை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைகின்றபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் அதிகமான காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
தற்போது சுமார் 3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எஞ்சிய காணிகளையும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்க வேண்டும்.
அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கமைய அவ்விடயம் தொடர்பில் நாம் செயற்பட வேண்டும்.
பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் கலந்துரையாடியே நாம் காணிகளைப் பகிர்ந்தளித்தோம்.
அத்துடன், காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.
இதில் மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். அதன் பின்னர் தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்ய வேண்டும்.
அப்போது காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும். நாட்டின் 30 சதவீத்த்திற்கும் அதிகமான காணிகள் வனப் பிரதேசத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எவ்வித முறையான திட்டமும் இல்லாமலேயே காணிகள் அவசரமாக வனங்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.
மலையகம், மகாவலி கங்கை, களனி கங்கை, களு கங்கை உள்ளிட்ட அனைத்து ஆறுகள் ஆரம்பமாகும் இடங்களிலும் நாம் வனங்களை இழந்துள்ளோம். எவ்வாறாயினும் நாம் வனங்களை அதிகரிக்க வேண்டும்.
எனவே நாம் உருவாக்கும் தேசியக் கொள்கையடிப்படையில் வனப்பகுதியை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
இதற்கான காணிகளைக் கண்டறியும் பொறுப்பை நாம் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம். இதற்காக நானும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்ப்பு இருந்தால், அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து அதனை தோற்கடிக்க முடியும்.
இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்தாக வேண்டும். நான் இது குறித்த யோசனைகளை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இதில் உங்களின் கருத்துக்களையும் 04 ஆம் திகதிக்கு முன்னர் என்னிடம் முன்வைத்தால், அவற்றையும் இணைத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்வோம். இந்த நாட்டைப் பிரிக்க நான் தயாராக இல்லை.
நாம் எவரும் தயாரில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் சிங்களவர்கள் இணைந்து வாழ வேண்டும்.
நமது தேசிய கீதத்தில் “ஒரு தாயின் மக்கள்” என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என்பவற்றை நாம் அனைவரும் இணங்கும் வகையில் படிப்படியாக தீர்த்துக் கொள்ள முடியும்.
இந்தப் பிரச்சினைகளில் தங்கிவிடாது, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு முன்நோக்கிச் செல்வோம்.
நாம் யாரும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. நாட்டைப் பிரிக்கப் போவதில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இணைந்து பயணிப்போம்.’’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தன தேரர், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, பவித்ரா வன்னியாரச்சி, டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்தன, துமிந்த திசாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.எ சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சி.வி விக்னேஸ்வரன், சுரேன் ராகவன், சரத் வீரசேகர, சிவநேசத்துறை சந்திரகாந்தன், சாகர காரியவசம், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம் அதாவுல்ல, ரிஷாட் பதியூதீன், இம்ரான் மஹருப் உள்ளிட்ட நாடாளுமன்ற கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.