இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் சந்திக்கவுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்துள்ள சூழலில் அனைத்துத் தரப்பையும் ஓரணியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று சந்திக்கின்றார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோரை ஒன்றாக மு.ப. 11.15 மணிக்குச் சந்திக்கின்றார்.
எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நண்பகல் 12 மணிக்கே அவர் சந்திக்கவுள்ளார்.
இந்திய அதிகாரிகளின் அழைப்புக்கு அமைவாகவே இந்தச் சந்திப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.