அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (09) மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், கே.எம்.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
நாளை 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்படவேண்டிய விடயங்களை ஆராய இன்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தன.
இதன்போது, அரசியலமைப்புக்கு அமைவாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதிக்குள் அல்லது ஒரு வாரத்திற்குள் மாகாண அதிகாரங்கள் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும்.
நன்றி சிலோன்ஸ்ரீ