தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றுவதையும், கூட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்து களமிறங்குவதற்கு மத்திய குழுவின் பெரும்பான்மையினர் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விடயம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை (9) கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனுடன் கூடி ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் களுவாஞ்சிக்குடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று முந்தினம் சனிக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமானது.கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம், அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக மத்திய குழு உறுப்பினர்கள் ஆராய்ந்து நிலைமைகளை வெளிப்படுத்தலாயினர்.
இச்சமயத்தில் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோரை தவிர ஏனையவர்கள் தனித்தனியாக களமிறங்கினால் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
எனினும், சேனாதிராஜாவும் தவராசாவும் அவ்வாறு தனித்தனியாக சென்றால் ஒற்றுமை சீர்குலைந்துவிடும் என்ற வாதத்தினை தொடர்ச்சியாக முன்வைத்திருந்தனர்.
எனினும், கூட்டாக போட்டியிட்டால் பல சபைகளின் அதிகாரத்தினை இழக்க வேண்டியேற்படும் என்பதோடு கடந்த தேர்தலில் அவ்வாறு இழந்த சபைகளும் உதாரணங்களாக காட்டப்பட்டது.
அத்துடன், ஊடகங்கள் தான் தனித்தனியாக போட்டியிடுவதாக காண்பிக்கின்றதே தவிர கூட்டமைப்பின் ஒற்றுமை குலையவில்லை. மாறாக, தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு இன்னமும் பலம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தற்போதைய தேர்தல் முறையில் தொழில்நுட்ப ரீதியாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு உதவும் என்றும் பெரும்பாலானவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
எனினும், இந்த விடயம் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்துக்களுடன் ரெலோ, புளொட் ஆகிய தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை மீண்டும் ஒன்றிணைப்பது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் எழுதிய கடிதத்தையும் மையப்படுத்தி கலந்துரையாடல் ஆரம்பமானது.
இதன்போது ரெலோவிலிருந்து வெளியேறிய சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் அக்கட்சியுடன் முதலில் இணைய வேண்டும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய விக்னேஸ்வரன், அனந்தி போன்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு உரிய பிரதிபலிப்புக்களை செய்தால் அதை பற்றி பரிசீலிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டுமே அரசியல் கட்சியுடன் வெளியில் இருப்பதால் அவரை மீள இணைப்பது குறித்த பேச்சுக்களை அவசியம் ஏற்பட்டால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் காலக்கெடுவுடன் அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதன்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே விடுத்துள்ள அறிவிப்புக்கு அமைவாக, அதாவது பதிவு விடயத்தில் அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என்பதை உள்வாங்கி, உடனடியாக கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்து தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சியின் மாநாட்டை நடத்துவது பற்றிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதோடு, இறுதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பிலும், அதில் நம்பிக்கை ஏற்படும் வகையில் எவ்விதமான முன்னெடுப்புக்களும் நடைபெறவில்லை என்றும் சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இக்கூட்டம் குறித்து கேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கூட்டமைப்பு வலுவாக இருப்பதற்காக தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் மூன்றும் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடும்.
இருப்பினும், சபைகளின் வலுவான நிலைமைகளை அடைவதற்காக தனித்தனியான வேட்புமனுக்களை தாக்கல் செய்து களமிறங்கும். இதற்கு தமிழரசுக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்துள்னனர்.
அத்துடன் இவ்விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பேச்சுகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டமைப்பு பதிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் கடிதத்தினை ஆராய்ந்த தலைவர் சம்பந்தன் ஏற்கனவே அவ்விடயத்தில் அவசரமான தீர்மானங்களை எடுக்கமுடியாது என்று அறிவிப்பு விடுத்துள்ள நிலையில் அதனை மத்திய குழு ஏகமனதாக உள்ளீர்த்துள்ளது என்றார்.