அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியாக வலுவான முறையில் தயாராகி வருகின்றது.
பிரதேச ரீதியாக துல்லியமான வெற்றிகளை ஈட்டுவதற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம், மக்களின் ஆணையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் தயார்படுத்தியுள்ளோம்.
ரணிலுக்கு ஆணை வழங்காத மக்கள்
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆணையை மக்கள் தனக்கு வழங்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
அவர் குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான ஆணையைக் கூட நாட்டு மக்கள் வழங்கவில்லை என்பதுதான் உண்மை.
எனவே, அவர் தற்போது கூறும் கதைகள் மிகவும் நகைப்புக்குரியதாக இருக்கின்றது.
அவருக்கு ஜனாதிபதியாவதற்கோ நாட்டை பொறுப்பேற்பதற்கோ மக்கள் ஆணையை வழங்கவில்லை.
தேர்தல் என்பது பொதுமக்கள் முக்கிய ஜனநாயக உரிமையாகும், அதனை பறிப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.