“இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாக வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்ல தெளிவு இருக்கின்றது” என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்பாக சிங்கள மக்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இருக்கக்கூடிய அச்ச நிலையினை தான் சீனா இவ்வளவு காலமும் பயன்படுத்தி இருக்கின்றது.
இந்தியா தமிழ் மக்களுக்கு சார்பான நாடு, வடக்கு கிழக்கை தனி நாடாக கொடுத்துவிடும் என்றெல்லாம் அச்ச நிலை சிங்கள மக்களுக்கு இருந்தது. இன்று வரை இருக்கின்றது.
இந்தியாவை சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு சார்பான நாடாக தான் பார்க்கின்றார்கள். ஆனால் ஈழத்தமிழர்களை பொருத்தவரை இந்தியாவை நம்புகிறார்கள். ஆனால் இந்தியா ஈழத்தமிழர்கள் சார்பாக இன்று வரை ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
பல உதவிகளை செய்திருக்கின்றார்கள், பல்வேறு அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்து இருகின்றார்கள். ஆனால் 13ஆம் திருத்தச்சட்டம் என்ற அளவோடு நிற்கின்றார்கள்.
போர் குற்ற விசாரணை, அல்லது ஈழத்தமிழ் மக்கள் கோருகின்ற இனவழிப்பு விசாரணை அல்லது வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள், கிழக்கு மாகாணத்தை தனியாக கையாளுகின்ற விடயங்கள் பற்றியெல்லாம் இந்தியா இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை.
ஆகவே இந்த அணுகுமுறைகளின் பலவீனங்களை அதாவது, தமிழ் மக்கள் சார்பாக இந்தியா இல்லை என்பதை ரணில் விக்ரமசிங்க நன்கு உற்று ஆராய்ந்து இருகின்றார்” என தெரிவித்தார்.