நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அரசியலை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. உண்பதற்கு உணவு இல்லை. உடல் உறுப்புகளை விற்று உணவு தேடும் பரிதாப நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டு இருக்கும் நிலையில், தேர்தலுக்கு வடம் பிடித்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.
பிறக்கின்ற ஆண்டு தேர்தல் ஆண்டு என்ற நிலைக்கு இலங்கை இப்போது தள்ளப்பட்டு இருக்கிறது. சகல கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஊர் ஊராக தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது. அதனுடைய தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச, பிரசார மேடைகளிலே மக்களுடைய, பொருளாதார நெருக்கடி தொடர்பாக அப்பட்டமாக எடுத்துக் கூறுகிறார். ஆட்சிக்கு வந்தால், பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அடித்து கூறுகிறார்.
ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஆசனம் எதுவும் பெற முடியாமல் படு தோல்வி அடைந்த கட்சி ஆகும்.
அந்தக் கட்சி பெற்ற தேசிய பட்டியல் மூலம், ஓர் ஆசனத்தை பெற்று பாராளுமன்றத்துக்குள் நுழைந்த, ரணில் விக்கிரமசிங்க, அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதியாகிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 65 லட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பொழுதிலும், அந்த மக்களாலேயே துரத்தி அடிக்க பட்டார்.
சரியான திட்டமிடலும் முகாமைத்துவமும் இல்லாமல் நாட்டை நடுத்தெருவில் சீரழித்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி ஓடியதை அடுத்து, ஜனாதிபதியானவர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இவர் பதவியேற்றதன் பின்பு, வரிசையில் மக்கள் காத்திருந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், நாடு இன்னும் ஸ்திர நிலையை அடையவில்லை. இந்த நிலையிலும் நாட்டை ஸ்திரப் படுத்துவதாக இருந்தால், தேர்தல் நடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி செயல்படுகிறார்.
ஆசனங்கள் எதுவுமே இல்லாத நிலையில் இருக்கின்ற தனது ஐக்கிய தேசியக் கட்சியை எவ்வாறு களத்தில் இறக்குவது என்ற வியூகம் வகுப்பதிலும், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையிலும் ஜனாதிபதி நேரடியாகவே இப்பொழுது ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பாக, ஆராய்வதற்காக, மாவட்டம் மாவட்டமாக அவர், அதிகாரிகளோடும் அமைச்சர்களோடும் படைபட்டாளங்களோடும் செல்லும் அவர், அதிகாரிகள் மட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினாலும், தனது ஐக்கிய தேசியக் கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்படுவதை நாம் அவதானிக்கவே முடிகிறது. இதேபோல, மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கிடக்கின்ற ஆளும் கட்சியான பொது சன பெரமுன ( SLPP ), தேர்தல் கூட்டணிகளை யாருடன் அமைப்பது என்பது தொடர்பில் தடுமாறிய நிலையில் , வியூகங்களை அமைப்பதற்கு பசில் ராஜபக்ச தலைமையில் செயல்படுகின்றார்கள்.
மக்களின் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஓரம் தள்ளிவிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலை தான் இது. ஆனால் இன்றைய நிலையில், எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில், எந்தக் கட்சியும் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள், பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல்- இவை நான்கு தேர்தல்களையும் இந்த ஆண்டு நடத்தியே ஆக வேண்டும். இலங்கையில் ஒரு ஸ்திரமான நிலையை உருவாக்க வேண்டும் என்பது சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு. ஒரு ஸ்திரமான நிலை இருந்தால் தான், நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது யதார்த்தமான உண்மையாகும்.
உறுதியான ஓர் அரசாங்கம் இலங்கையில் இருந்தால் தான், உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முடியும் என்பது, சர்வதேச நாணய நிதியத்தினதும், கடன் வழங்கும் நாடுகளினதும் எதிர்பார்ப்பாகும்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது, உறுதியான பொருளாதார நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதாக இருந்தால், எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது மக்கள் மத்தியிலே இப்பொழுது எழுந்திருக்கின்ற பெரும் கேள்வி ஆகும்.
உள்ளூர் ஆட்சி சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதில், எதிரணி கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன. அதற்காக உச்ச நீதிமன்றம் வரை இந்த கட்சிகள் சென்று இருக்கின்றன.
உண்மையில், உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திர நிலையை ஏற்படுத்த முடியுமா? என பொருளியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
எதிர்க்கட்சியினதும், ஏனைய சிறுபான்மை கட்சிகளினதும் இந்த அடம் பிடிப்பு, நாட்டில் ஒரு தளர்வு போக்கை காட்டுகின்றது.
நிலை குலைந்து போய் இருக்கின்ற இந்த அரசியல் கட்சிகள், தங்களை பலப்படுத்துவதற்காகவே, உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று பிடியாக நிற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
அதாவது, நாட்டில் ஸ்திர நிலை ஏற்படுகிறதோ இல்லையோ…? கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த அடம் பிடிப்பு தெட்டத் தெளிவாகின்றது.
பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தான், உலகுக்கு ஒரு ஸ்திர நிலையை காட்டுவதற்கு வழி ஏற்படுத்தும்.
உள்ளூராட்சி தேர்தலை தான் முதலில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களமும் செய்கிறது போல் தெரிகிறது.
இதற்கு கட்சிகளின் அழுத்தங்களும் ஒரு காரணம். இந்த மாதம் முடிவுக்குள் தேர்தலுக்கான தகுதி அறிவிக்கப்படும் என்பது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தாக இருக்கிறது.
உள்ளூராட்சி சபைகள் என்பது, அரசாங்கத்தின் நிர்வாக அலகுகளை கீழ் மட்டத்துக்கு கொண்டு செல்லும் ஜனநாயக வழிமுறையாகும். உள்ளூர் ஆட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் நாடு இருக்கின்ற நிலையில் இஸ்திரி நிலையை ஏற்படுத்துவதாக இருந்தால், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். மாறாக, கட்சிகளின் பலத்தை காட்டுவதற்கான ஒரு களமாகவே உள்ளூராட்சித் தேர்தல் இருக்கப் போகிறது.
இன்றைய நெருக்கடி நிலையில், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திப்பவர்கள், உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதை முழு மனதுடன் ஏற்க மாட்டார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.
குணா –