தொழில்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு சட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ள நிலையில் மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, சராசரியாக 65 சதவீத கட்டண உயர்வை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. இது தொடர்பில் செய்தித்தாளொன்று தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் விதிகளின்படி, அமைச்சரவை, பொதுப் பயன்பாட்டுத் துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்தாலோசித்து, தனக்குத் தேவையான இடத்தில், பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்டிருப்பதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கூறியுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை
அத்தகைய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் கடமைப்பட்டுள்ளார் என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்று (02.01.2023) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உத்தேச கட்டண உயர்வின் கீழ் அலகு மற்றும் நிலையான கட்டணங்கள் இரண்டும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளன.