(கனகராசா சரவணன்)
இலங்கையில் முதல் முதல கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (31) அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் க.சரவணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஊடகவியலாளர் தேவராஜாவின் சகோதரர் அக்கரைப்பாக்கியன் உள்ளிட்ட குடும்ப உறவுகள், ஊடகவியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மறைந்த ஊடகவியாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா திருவுருவப் படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சகோதரரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வருகை தந்தோர் அனைவராலும் சுடரேற்றி, மலர்தூவி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அக்கரைப்பற்று பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய கணவதிப்பிள்ளை தேவராஜா கடந்த 1985 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் திகதி இராணுவ சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்டு அம்பாறை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.