கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் எழுதியதாக கூறப்படும் கடிதம் இதுவரை பொலிஸாரிடம் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கடிதத்தைக் கொடுக்க குடும்பத்தினர் தயக்கம் காட்டுவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதனை தொடர்ந்து தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசாங்கப் பரிசோதகர்களின் விசேட குழுவொன்று நேற்று மாலை கொழும்பு 7, மல் வீதியிலுள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளது.
அறையில் சிக்கிய முக்கிய ஆதாரம்
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்ட வயர் மற்றும் தினேஷ் ஷாப்டரின் கைகளைக் கட்டிய சில கேபிள் வயர்கள் போன்ற மாதிரியும் அவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தினேஷ் ஷாப்டரின் தாயார் வீட்டில் தொலைக்காட்சிக்கு ஆண்டெனா கம்பி சரி செய்ய வயர்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதுடன், 08 கேபிள் இணைப்புகள் தினேஷ் ஷாப்டரின் அறையில் உள்ள மேசையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரின் கைகள் கட்டப்பட்ட கேபிள் டை இந்த நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகை அல்ல என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான புதிய தகவலை உறுதிப்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் வணிக பரிவர்த்தனைகள்
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது புதிய கருத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மயானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், தினேஷ் ஷாப்டரின் கார் அருகே ஒருவர் நடந்து செல்வதை பார்த்துள்ளார். அந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், இறப்பதற்கு முன்னர் தினேஷ் ஷாப்டர் தனது மாமியாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியின் மீதும் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அவர் தனது செய்தியில் “இவ்வளவு நல்ல மகளை வளர்த்து என்னிடம் ஒப்படைத்த அம்மாவுக்கு மிக்க நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, தினேஷ் ஷாப்டரின் இரண்டு சகோதரர்களிடமும், ஒரு சகோதரியிடமும் தினேஷ் ஷாப்டரின் சொத்துக்கள் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.