தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய தினத்திற்கான வானிலை அறிவிப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23.12.2022) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
மழை, காற்று நிலைமை அதிகரிக்கும்
அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக டிசம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.