இலங்கையில் நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார்.
நீண்ட நேர மின்வெட்டு
அவர் மேலும் கூறுகையில், நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டநேர மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நுரைச்சோலை, நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்றைய தினம் (23.12.2022) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
மின்சார இழப்பை ஈடு செய்தல்
இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி ஆலை, தற்போதுள்ள நிலக்கரி இருப்புகளை நிர்வகிக்கவும், வழக்கமான பராமரிப்புக்காகவும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இதனால் ஏற்படும் மின்சார இழப்பு, ஏனைய கிடைக்கக்கூடிய வழிகளில் ஈடுசெய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.