(கலைஞர்.ஏஓ.அனல்)
36 வருடங்கள் ஆசிரியர் சேவையில் சிறந்த பணியை மேற்கொண்டு பணிமூப்பு பெற்று விடை பெற்றுச் செல்லும் திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியால அதிபர் ரீ.ஈஸ்வரன் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது.
ஆசிரிய பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கு அமைய மாணவர்களுக்கு பெளதீகவியல் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்து பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியவர்.
இன்று மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையோடு மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டு பொன்னாடை, நினைச்சின்னங்கள் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவரது சேவைக்காலம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் என் பலரும் தங்களது அனுபவப்பகிர்வை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்கள் 1962.10.31 ஆம் திகதி மயில்வாகனம் தவமணி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை பெரியகல்லாறு மத்திய கல்லூரியிலும் பயின்றார்.
1982 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி கற்கையைச் சிறப்பாக தொடர்ந்து, பின்னர் 1986.10.12 ஆம் திகதி பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையைப் பொறுப்பேற்று கொண்டார். தான் கற்ற பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுவது பெருமையெனக்கருதி பிறந்த ஊருக்கே தன்னை முழுமையாக அர்ப்பணிச்செய்தார்.
பின்னர் 2006 தொடக்கம் 2012 வரை மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சீர்கல்வியை சிறப்பாக கற்பித்தார். அதன் பின்னர் 2012 முதல் இன்று வரை தனது சேவையை மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பெரும் புகழ் சேர்த்து இன்று ஓய்வு பெற்றார்.
1992 ஆம் ஆண்டு தனது பட்டப்பின் டிப்ளோமா கற்கையை தேசிய கல்வி நிறுவனத்தில் பூர்த்தி செய்து தொழில் தகைமையைப் பெற்றுக்கொண்ட இவர் தம்பியப்பா நடேசமூர்த்தி அவர்களை கரம்பிடித்து மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். மூன்று பிள்ளைகளும் கணினித்துறையில் பொறியாளராக, கணினி தரவு பதிவாளராக அரச உயர் பதவிகளில் பதவி வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பெரும் மதிப்புக்குரிய திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது ஓய்வுக்காலங்கள் சிறப்பாக அமைவதோடு நீண்ட ஆரோக்கியத்தோடு என்றும் நலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
வாழ்க வளமுடன்.