தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன?
சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…!
“இனி நாங்கள் எப்பவுமே இலங்கை பக்கம் செல்லமாட்டோம். நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டோம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவோம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணி எங்களை யு.என் பொறுப்பெடுத்து காப்பாத்தோனும்” இவ்வாறு கூறியிருப்பவர் வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப் புலம்பெயரி.
அவர் ஒரு இளம் தாய். ஒரு சிறு பிள்ளையை கையில் வைத்திருக்கிறார். பயணத்தின் போது தாங்கள் அருந்திய அழுக்கான நீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் போத்தலையும் கையில் வைத்திருக்கிறார்.
கனடாவை நோக்கிக் கப்பலில் புறப்பட்ட 303 தமிழர்களில் அவரும் ஒருவர். அவர்கள் பயணம் செய்த படகு கடந்த வாரம் சேதமடைந்து சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். இதுபோலவே அவுஸ்திரேலியாவை நோக்கியும் ஆபத்தான கடல்வழிகளின் ஊடாக தமிழர்கள் புலம்பெயர முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு கடல் வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பப்போவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்துவருகிறது. கடல் வழியாக மட்டுமல்ல வான் வழியாக வரும் புலம்பெயரிகளையும் திருப்பி அனுப்பப்போவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந் தவாரம் அறிவித்திருக்கிறது.
வெளிநாடுகளுக்கு வெளியேறும் தமிழர்கள்
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் ஓர் ஆங்கில ஊடகவியலாளரோடு உரையாடும்பொழுது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இலங்கையிலிருந்து பெருந்தொகையான மூளை உழைப்பாளிகளின் விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அண்மை காலங்களில் அந்த விண்ணப்பங்களின் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனால் விசா விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம் என்ற பொருள்பட அவர் கதைத்திருக்கிறார்.
கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கி மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் பெருந்தொகையான தமிழர்களும் சிங்களவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக மேற்படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு என்ற அடிப்படையில் படித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரையிலும் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.
போர்க்காலங்களில் தமிழ் இளையோர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பொருளாதார காரணங்களுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
ஆனால் அண்மைக் காலங்களில் சிங்கள இளையோரும் அவ்வாறு வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் கணிசமானவர்கள் மூளை உழைப்பாளிகள். ராஜபக்சக்கள் இந்த நாட்டை எந்த மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்களோ, அந்த மக்களே நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னரும் புலப்பெயர்வு நிகழ்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் குவிமையம் ஆகும். அண்மையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் பயிலும் ஒரு மாணவரிடம் கேட்டேன் நல்ல பெறுபேறு கிடைத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று, அவர் சொன்னார் “வெளிநாட்டுக்குa àப் போவேன்” என்று.
புலம்பெயர் சமூகம்
அவருடைய இரண்டு சகோதரர்களும் அவ்வாறு வெளியேறத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார். தமிழ் இளையோரில் வகை மாதிரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினரை எடுத்து “எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள்?”என்று கேட்டால். அதற்கு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரின் தொகையே அதிகமாயிருக்கிறது.
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே நிதி ரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்றுவிட்டது. அந்நாடுகளில் கல்வி ஒரு சுமையாகவோ சித்திரவதையாகவோ இல்லை. அதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாட்டில் உள்ள இளைய தலைமுறையில் ஒரு பகுதி வெளியேற முயற்சிக்கின்றது.
இவ்வாறு வெளியேற விரும்பும் பலருக்கும் புலம்பெயர்ந்த பரப்பில் யாரோ ஒரு உறவினர் அல்லது ஏதோ ஒரு தொடர்பு உண்டு. அவ்வாறு புலம்பெயர்ந்து செல்வதன்மூலம் தமது குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தலாம், தாமும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஒருபுறம் போதைப்பொருள் பாவனை வாள் வெட்டுக் கலாச்சாரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகின்றன.
இன்னொருபுறம் கடந்த 2009க்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறும் இளையோரின் தொகை குறையாமல் இருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தாயகம்,தேசியம் சுயநிர்ணயம் என்ற கோஷங்களை விடாது உச்சரிக்கின்றன. ஆனால் தாயகத்தில் தமிழ் மக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது.
ஒருபுறம் தாயகத்திலும் டயஸ்போராவிலும் பிள்ளைப்பேறு விகிதம் பெருமளவிற்கு குறைந்து வருகிறது. இன்னொரு புறம் தாயகத்திலிருந்து தொடர்ச்சியாக மணப்பெண்களாக ஒரு தொகுதி பெண்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமாந்தரமாக மூளை உழைப்பாளிகளும் கள்ளமாகக் குடியேறுபவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளிடம் அல்லது செயற்பாட்டாளர்களிடம் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் ஏதாவது உண்டா? ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக வனையும் பிரதான அம்சங்கள் ஐந்து இனம், நிலம், மொழி, பொதுப்பண்பாடு, பொதுப் பொருளாதாரம் என்பவையே அவையாகும். இதில் இனம் என்று குறிப்பிடப்படுவது பிரயோகத்தில் தமிழ் சனத் தொகையைத்தான்.ஏற்கனவே போரில் தமிழ் சனத்தொகையில் குறைந்தது மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். அல்லது காணாமல் போய்விட்டார்கள்.
தப்பிப் பிழைத்தவர்களில் இளையவர்கள் இப்பொழுது புலம்பெயர முயற்சிக்கிறார்கள். இனப்படுகொலை புலப்பெயர்ச்சி என்பவற்றால் ஏற்கனவே சனத்தொகை மெலிந்து வருகிறது. இந்நிலையில் பிள்ளைப் பேறு விகிதமும் குறைந்து வருவதனால் சனத்தொகை மேலும் குறையக் கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.
தமிழர்கள் சிறுக்கிறார்களா..! பெருக்கிறார்களா..! | Over 300 Lankan Migrants Held In Vietnam
கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.சர்வோதயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின்போது அங்கு பிரசன்னமாகியிருந்த நடுத்தர வயதைக் கடந்த சுமார் முப்பது பெண்களிடம் வளவாளர் ஒரு கேள்வி கேட்டார்.”நீங்கள் எல்லாரும் எத்தனை சகோதரர்களோடு பிறந்தீர்கள்?”அவர்களில் அநேகமானவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களோடு பிறந்ததாகச் சொன்னார்கள்.
அதன்பின் வளவாளர் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் “உங்களில் எத்தனை பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்?”துரதிஷ்டவசமாக அங்கிருந்த பெண்களில் மூவருக்குத்தான் மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள். ஏனைய அனைவருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான்.இதுதான் தமிழ்ச் சமூகத்தின் இப்போதுள்ள நிலைமை.
தாயகத்தை விட்டு வெளியேறும் இளையோர்
தமிழர்கள் சிறுக்கிறார்களா..! பெருக்கிறார்களா..! | Over 300 Lankan Migrants Held In Vietnam
தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிள்ளைப்பேறு விகிதம் குறைந்து வருகிறது.
அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது. தமிழ் இளையோர்அதேசமயம் புலப்பெயர்ச்சியும் தொடர்கிறது. தமிழ் இளையோர் தாயகத்தை விட்டு வெளியேறுவதனால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு எதிர்காலம் கிடைக்கலாம். ஆனால் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் பார்த்தால் அது தாயகத்தில் சனத்தொகையைக் குறைக்கிறது.
தேர்தல்மைய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் வாக்காளர்களின் தொகை குறைக்கிறது.எல்லா விதத்திலும் அது தமிழ் மக்களை பலவீனப்படுத்துகிறது. காசிருந்து என்ன பலன்? தாயகத்தில் சனத்தொகை மெலிந்து கொண்டே போகிறது.
ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெருக்கவில்லை சிறுத்துக் கொண்டே போகிறார்களா? தமிழ் இளையோர் மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தவிப்பு ஏன் அதிகரிக்கின்றது? இதைக் குறித்து தமிழ் கட்சிகளோ அல்லது செயற்பாட்டாளர்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது குடிமக்கள் சமூகங்களோ சிந்திக்கின்றனவா? சில மாதங்களுக்கு முன்பு வலிகாமம் பகுதியிலுள்ள ஒரு பங்குத்தந்தை என்னை தனது பங்கில் உள்ள இளையோர் மத்தியில் பொருளாதார நெருக்கடிகள்பற்றி பேசுமாறு அழைத்திருந்தார்.
நான் பேசிக்கொண்டிருந்தேன்.ஆனால் அங்கு கூடியிருந்த இளையோர் அந்தப் பேச்சை ரசிக்கவில்லை.அக்கறையோடு கேட்கவில்லை.ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்தி விட்டுக் கேட்டேன் “உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நான் கதைக்கின்றேனா?” “ஆம்” என்று சொன்னார்கள.”உங்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றி அறிய விரும்பவில்லையா?” என்று கேட்டேன்.அறிந்து என்ன பயன் என்ற தொனிப்படக் கேட்டார்கள்.
“சரி,எதிர்காலத்தில் என்னவாய் வர விரும்புகிறீர்கள்? உங்களுடைய வாழ்வின் இலட்சியம் என்ன?” என்று கேட்டேன். சுமார் 40 பேர் வந்திருந்த அந்தச் சந்திப்பில் நான்கு பேர்களிடம்தான் எதிர்கால இலட்சியம் இருந்தது. ஏனையவர்கள் கேட்டார்கள் “ஏன் அப்படி ஒரு இலட்சியம் இருக்க வேண்டும்? வாழ்க்கையை இப்பொழுது இருப்பதை போலவே அனுபவித்து விட்டு போகலாமே?” என்று.
(நன்றி – தமிழ் )