சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா
சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா
இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம் என்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவித்திருந்ததாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான சிங்கள வார இதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் திடீர் இலங்கைப் பயணம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் மௌனம் காத்து வந்தன. பொதுவாக டோவல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருந்தால், இந்திய ஊடகங்கள் அதனை மற்றவர்களுக்கு முன்னதாக வௌியிட்டு வருவது வழமை.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலகட்டத்தின் போது, டோவல் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து, கோட்டா மற்றும் ஏனைய உயர்மட்ட அரசியல்வாதிகளை அதிகாரபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்திய ஊடகங்கள் ஒவ்வொருவரின் ஒளிப்படங்களுடன் செய்தி வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால், இம்முறை டோவலின் பயணம் குறித்த செய்திகளோ, ஒளிப்படங்களோ இந்திய ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியத்தை தந்தன.
டோவலின் இலங்கைப் பயணத்தின் அதீத இரகசியம் காரணமாக இருக்கலாம்.
உயர்மட்டத்தினருடன் சிறப்பு சந்திப்புக்கள்
இலங்கைக்கு டோவல் பயணம் செய்து உயர்மட்ட அரசியல்வாதிகளை சந்திக்க உள்ளதாக முன்னரே செய்தி கசிந்திருந்தது. அதன்படி, இலங்கையில் டோவல் கழித்த சில மணி நேரங்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு கடந்த வாரம் வருகை தந்த பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தனது பயணத்தின் உச்சக்கட்ட இரகசியத்தைக் காக்க டோவல் அக்கறை எடுத்துக்கொண்டது ஒரு சிறப்பு நிகழ்வு.
வான்வெளி மூடப்பட்டதா?
இலங்கையை விட்டு டோவல் வெளியேறிய சில மணித்தியாலங்களில், உள்நாட்டில் இயங்கும் நியூஸ்வேவ் இணையத்தளம் சிறப்பு செய்தியொன்றை வெளியிட்டது.
இலங்கைக்கு சொந்தமான வான்வெளியின் ஒரு பகுதியை மூட இந்தியா நடவடிக்கை எடுத்ததாக செய்தி வெளியிட்டது. இலங்கைக்கு சொந்தமான வான்வெளியை மூடுவது மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்புப் படை வானூர்தியோ அல்லது வர்த்தக வானூர்தி கூட இலங்கைக்கு வருவதோ அல்லது வெளியேறுவதோ இலங்கையின் மூடிய வான்வெளிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டது.
வானூர்தி வந்ததா?
இலங்கையின் வான்வெளி திடீரென மூடப்பட்டது என்ற செய்தியால், சீன வானூர்தி இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்ததாகவோ அல்லது அடையாளம் தெரியாத எதிரி வானூர்தி இந்தப் வான்வெளிக்குள் நுழைந்ததாகவோ வந்த செய்திகளால் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் கருதினர்.
ஏனெனில், சீன நீர்மூழ்கிக் கப்பல்களும், ‘யுவான் வாங் 5’ உயர்ரக தகவல் தொடர்புக் கப்பலும், இந்தியாவுக்குத் தெரியாமல், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், இந்தியப் பெருங்கடல் வழியாக, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததை, இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு சீர்குலைந்து போனதை காணமுடிந்தது. அதனால்தான் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும் கடந்த காலங்களில் எமது கடல் எல்லையை எவ்வாறு கண்காணித்து வருகின்றது என்பதை காண முடிகின்றது.
இந்தியாவில் மாபெரும் போர் பயிற்சி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கனகா நகரில் இரகசிய இடத்தில் இந்தியா கடந்த சில நாட்களாக மாபெரும் இராணுவப் பயிற்சி நடத்தி வருவதாக தெரியவருகின்றது.
இந்திய வான் படையும் இராணுவமும் இணைந்து நடத்திய ‘சத்ரு நாஷ்’ என்ற இந்த இராணுவப் பயிற்சியில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக கதிரியக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய வான்படை தரை இலக்குகளைத் தாக்கும் பயிற்சியை நடத்தியது.
இதற்காக இந்தியாவின் அதி நவீன போர் வானூர்திகளை பயன்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். சமீபத்திய போர் தாக்குதல் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி எதிரி இலக்குகள் மீதான தாக்குதல்களும் நடத்தப்பட்டன. எமக்கு அதன் காட்சிகள் கூட வெளியாகின. அவற்றினை பார்வையிடும்போது, கற்பனை செய்ய முடியாத போர் தொழில்நுட்பத்தை இந்தியா எவ்வாறு பெற்றுள்ளது என்பதை நாம் தெளிவாகக் கவனிக்க முடியும்.
இந்தியாவில் தரையிறங்கும் அமெரிக்கா!
அமெரிக்க சிறப்பு பாதுகாப்பு குழுவும் இந்தியா வருகை தரவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுவரை நடக்காத மாபெரும் போர் பயிற்சியை இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தி வருகின்றது.
இந்திய-சீனா எல்லைக்கு அருகில் உள்ள இமயமலையின் உத்தரகாண்ட் பகுதியில் இந்த நடவடிக்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை ஒடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளன என்பதை இந்த நிகழ்வுகளில் இருந்து அறியலாம்.
இந்தப் பின்னணியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த இராணுவ நடவடிக்கை குறித்து இலங்கைக்கு தெரிவிக்க மிகவும் இரகசியமாக இலங்கைக்கு வருகை தந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ராஜதந்திர நெருக்கடி!
எமது ஊடகத்தில் பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், சீனாவின் ‘யுவான் வாங் – 5’ கப்பலை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை பாரிய இராஜதந்திர மோதலில் ஈடுபட நேரிடும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பு. இலங்கை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கொண்டுள்ள எதிர்வினைகளைப் பார்க்கும் போது நாம் அன்று சொன்ன விடயங்கள் இன்று யதார்த்தமாகி விட்டதாகவே தோன்றுகின்றது.
காத்திருக்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 4 மாதங்களுக்கு மேலாகியும், ரணிலை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி இதுவரை சந்தர்ப்பம் வழங்கவில்லை.
இலங்கைக்கான இந்திய தூதுவர், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாகல ரத்நாயக்கவை திடீரென இந்தியாவிற்கு அனுப்பி சந்திப்பதற்கான நேரம் பெற ரணில் முயற்சித்த போதிலும் அவரால் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீனக் கப்பல் வருகை தர ரணில் அனுமதி வழங்கியதே இந்த வாய்ப்பு கிடைக்காததற்குக் காரணம் எனப் பலரும் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.