கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு!

அபு அலா –

கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று (18) திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளனி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜெலீல், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குலதீபன், பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளர் கே.கோபாலரத்தினம் உள்ளிட்ட மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்கள் இதன்போது பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து, சான்றிதழ் மற்றும் விருதுகள் போன்றவற்றை விழாவின் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிறந்த பாடகர்கள், எழுத்தாளர்கள், இளம் ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த 2020 ஆம் 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக இடம்பெறாமல் தடைப்பட்டு வந்த மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு விழாவை 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடாத்தவேண்டும் என்று செயற்பட்டு வந்த கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட காலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரின் செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஷேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த விருதுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரினால் வழங்கி வைக்கப்பட்டது.