பதிவாளர் நாயகமாக கல்முனை பிரதேச செயலாளர்; அரசியல்மயமான காணிப்பதிவகம்?
கல்முனை காணிப் பதிவகத்தின் பதிவாளர் அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலேதான் அவருடைய தமிழர் விரோதப் போக்கு தெட்டத்தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை இரண்டு பிரதேச செயலகங்கள் இயங்கிவரும் 58 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட பிரதேசம். 2013.01.01 முதல் 2022.04.25 வரை பதிவாளர் திணைக்களத்தின் பதிவுப் பிரிவுகளை மீளமைத்தல் நடவடிக்கையின்கீழ் தனித்தனியான பிரதேச செயலகப் பிரிவுக்குண்டான நடைமுறைகளை பயன்படுத்தி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய காணி பதிவு நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
2022.04.25 பின்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய காணி பதிவு நடவடிக்கள் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக கல்முனை காணிப்பதிவகம் தெரிவித்திருந்து. இது தொடர்பில் உள்ள பின்னணியை ஆராயும்பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கூடாக அமைப்புகளாலும், தனி நபர்களாலும் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கல்முனை பிரதேச செயலாளரும்,
கல்முனை காணிப் பதிவாளரும் வடக்கு பிரதேச செயலகத்தின்கீழ் வசிக்கும் பொதுமக்கள் நியமமான, நியாயமான அரச சேவையை பெறுவதில் தடையேற்படுத்தியள்ளதுடன் அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருவதை அறிய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேரடியாக பதிவாளர் நாயகத்தின் கட்டளைப்படி செயலாற்ற வேண்டிய கல்முனை காணி மாவட்ட பதிவாளர் காரியாலயம், கல்முனையில் அஹமட் அலி தனியார் வைத்தியசாலை பிறப்பு, இறப்பு பதிவுகளை பதிவது தொடர்பில் பிழையான வழிநடத்தலை மேற்கொண்டுவரும் கல்முனை பிரதேச செயலாளரின் கட்டளைப்படி பணியாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு விடையம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறின் அது தொடர்பில் பதிவாளர் நாயகத்தின் ஆலோசனை பெறப்பட்டே நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய நிலையில் இவரது செயற்பாடானது ஒரு திணைக்களத் தலைவருக்கு சற்றும் பொருத்தமில்லாத பக்கச்சார்பான நடவடிக்கை என உறுதிபடத்தெரிவதாக பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
காணிப் பதிவகத்தின் பதிவாளர் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் செயலாளராக செயற்பட்டவர் என்றும், கல்முனை பிரதேச செயலாளர் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ளவும் , பதிவாளர் தனது முன்னாள் அமைச்சரின் கட்சிவளர்சிக்காகவும் அக்கட்சியின் திட்டங்களை அமுல்படுத்தும் நடவடிக்கையாகவே இவற்றை செயற்படுத்தி வருவதாகவும், குறிப்பிட்ட கட்சியின் தமிழர் விரோதப் போக்கே அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்துமென்ற ஆலோசனையை இவர்கள் செயற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
இந்நிலையில் பதிவாளரின் தமிழர் விரோத, அரசியல் கட்சி சார்ந்த செயற்பாடுகள் குறித்து நீதியான விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், இவர் இக்காரியாலத்தில் தொடர்ந்தும் நீடிப்பாராயின் தமிழர்களின் ஆவணங்களுக்கு ஆபத்துகள் ஏற்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளை சுட்டிக்காட்டியும் கல்முனை மாவட்டப் பதிவகத்திற்கு இன முரண்பாடுகளை தோற்றுவிக்காத வகையில் அரச நியமங்களுக்கு அமைவாக பணியாற்றக்கூடய பதிவாளரொருவரை நியமிக்கக் கோரியும் பதிவாளர் நாயகம் மற்றும் கிழக்கு வலயத்தின் பரதிப் பதிவாளர் நாயகம் ஆகியோருக்கு சிவில் அமைப்புக்கள் தமது கோரிக்கைகளை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



