மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு – மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!!
மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்துவந்த ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிக்கிரிகை நடந்த மயானம் வரை சென்று இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) திகதி மாலை இடம்பெற்றுள்ளதுடன், மரணக்கிரிகைகளில் கலந்துகொண்ட அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் என்பவர் காட்டில் இருந்து அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்றிற்கு உணவு மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கிவந்துள்ளார். குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கட் மற்றும் உணவு வழங்குவதுடன் அவரின் மாற்றுதிறனாளியான பிள்ளையையும் குறித்த குரங்கு மகிழ்வித்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக குறித்த வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துதையடுத்து அவரின் வீட்டில் இறுதிகிரிகைகள் நேற்று (18) திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த வீட்டிற்கு வந்த குரங்கு குறித்த எஜமானார் சடலமாக இருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மரணித்தவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்திருந்துள்ளது.
இறுதிக்கிரிகையில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் குரங்கின் செயலைகண்டு ஆச்சரியமடைந்துள்ளதுடன், அனைவரது கண்களிலும் கண்ணீர் கசியவைத்துள்ளது.
அதேவேளை சடலத்தின் இறுதிக்கிரிகை இடம்பெற்ற மயானம் வரை சென்று உணவு கொடுத்தவருக்கு நன்றி உணர்வுடன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.




