புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மொழியும-சண் தவராஜா-
உலகின் மூத்த குடி எனக் கருதப்படும் தமிழ்க் குடி தற்போது உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தாலும், அதன் தாயகமாகத் தமிழ் நாடும், ஈழமுமே உள்ளன. திரைகடலோடித் திரவியம் தேடும் பண்பாடு கொண்ட தமிழ்க் குடி தனது வாழ்நாள் காலத்தில் உலகின் எட்டுத் திக்கும் பயணம் செய்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது போன்று, தான் சென்ற இடங்களில் எல்லாம் உள்ள மக்களோடு அது கலந்திருக்கும் என்பதையும் மறுத்து உரைத்துவிட முடியாது. என்றாலும் தமிழ்க் குடி இன்றும் தனது தனித் தன்மையைப் பேணி தாயகப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
தற்காலத் தமிழர்களின் பூர்வீக நிலப் பரப்பான தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக்குமான தொடர்பு வரலாற்றுக் காலத்துக்கும் முந்தையது. இங்கிருந்து பயணம் மேற்கொண்டு வெளிநாடுகளில் குடியேறியும், வெள்ளையர்களால் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டு பல நாடுகளில் குடியேற்றப்பட்டும் தமிழர்களின் பரம்பல் புதிய வடிவத்தைப் பெற்றது. இவ்வாறு சென்ற மக்களில் கணிசமானோர் பெயரளவில் மாத்திரமே தமிழர்களாக வாழ்ந்து வருவதையும் பார்க்க முடிகின்றது.
ஆனால், 1980களின் பின்னான காலப் பகுதியில் ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை காரணமாக இலங்கைத் தீவை விட்டு அகதிகளாக வெளியேறிய மக்கள் இந்தியாவிலும், மேற்குலகின் பெரும்பாலான நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழும் மக்களே புலம் பெயர் தமிழர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஏறக்குறைய 10 இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருவதாகக் கருதப்படுகின்றது. இதனை ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் மூன்றிலொரு விழுக்காடு எனலாம்.
ஈழ மண்ணில் வன்முறை ஆட்சி புரிய ஆரம்பித்த காலப் பகுதியில் ஆண்கள் – குறிப்பாக இளைஞர்கள் – சொந்த மண்ணைவிட்டு அகல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஐரோப்பிய மண்ணிலும், கனடாவிலும் இவ்வாறு கால் பதித்த ஆண்கள் ஒரு சில ஆண்டுகளின் பின்னர் தாம் வாழ்ந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஈழத்தில் இருந்து பெண்களை வரவழைத்து திருமணம் செய்து கொண்டனர். இதன் நீட்சியாக புலம்பெயர் மண்ணிலும் தமிழ்க் குழந்தைகள் மழலை பேச ஆரம்பித்தன.
இரண்டாவது தலைமுறையின் உருவாக்கம் முதலாவது தலைமுறையினர் மத்தியில் எழுப்பிய கேள்வியின் விளைவாக உருவானதே புலம்பெயர் தமிழ்ப் பள்ளிகள். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் சாதி, மத மற்றும் பிரதேச வேறுபாடுகள் உள்ள போதிலும், புலம்பெயர் சூழலில் அவற்றின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. இதனை வேறு வகையில் கூறுவதானால், புலம்பெயர் வாழ்வு தந்த நெருக்கடி அவர்களை நெருங்கிவரச் செய்தது எனலாம்.
ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு ஆயுதப் போராட்ட காலகட்டத்துக்கு முன்னரேயே ஆரம்பமாகிவிட்டிருந்த போதிலும், 1983 யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சிங்கள அரசின் அனுசரணை பெற்ற படுகொலையும், அதன் விளைவாக உக்கிரமடைந்த சூழலும் பெரும்பாலான இளைஞர்களைப் புலம்பெயரச் செய்தது. ஆரம்பக் காலகட்டத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவில் புலம்பெயர்ந்தனர். வாசிகசாலைக் கலாசாரத்தைக் கொண்ட அவர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றி சங்கங்களையும் கழகங்களையும் நிறுவினர்.
சகோதரப் படுகொலையின் விளைவாக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட ‘மாற்று இயக்கத்தினர்’ என விளிக்கப்படும் விடுதலைப் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் புலம்பெயர் நாடுகளில் முதலாவது அணி திரட்டலைச் செய்தனர். அதன் ஒரு அங்கமாக அவர்கள் தமக்கிடையேயான ஒருங்கிணைவுச் செயற்பாடுகளையும், ஆலயங்கள் நிறுவுதல், பாடசாலைகளை ஆரம்பித்தல் போன்றவற்றையும் தொடக்கி வைத்தனர்.
தனியார் நிறுவனங்களாகத் தொடங்கப்பட்ட பாடசாலைகள் பின்னாளில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் செயற்பாடாக மாற்றம் கண்டன. தமிழாலயம், தமிழ்க் கல்விச் சேவை போன்ற பெயர்களில் ஐரோப்பாவின் பல நாடுகளிலும், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கல்விச் செயற்பாடுகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களாலும் அங்கீகரிக்கப்படும் சூழல் பின்னாளில் உருவானது.
புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுள் அதிக எண்ணிக்கையானோர் கனடாவிலும் பிரித்தானியாவிலும் வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்வோரில் கணிசமானோர் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாக உள்ள போதிலும், தமது பிள்ளைகள் தாய் மொழியைப் பயில்வதை ஊக்குவிப்பவர்களாகவே உள்ளனர். அது மாத்திரமன்றி, அவர்களில் பெரும்பாலானோரின் வீட்டு மொழியாக இன்றுவரை தமிழே உள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்களின் முதலாவது தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளில் முறையான கல்வியைப் பெற்றிராத சூழலில் அவர்கள் மத்தியில் நிலவிய மொழியறிவுக் குறைபாடும் வீட்டு மொழியாகத் தமிழைப் பயன்படுத்த ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனெனில், புலம்பெயர் இரண்டாவது தலைமுறையினர் அநேகரின் வீடுகளில் வீட்டு மொழியாகத் தமிழ் இல்லை. இருந்தும், இரண்டாவது தலைமுறையினரும் தமது பிள்ளைகள் தமிழைப் பயில ஊக்குவித்து வருவதைக் காண முடிகின்றது.
ஆனால், இந்த நிலை நீடிக்குமா என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கின்றது. பத்துக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்கும் ஆற்றல் இயல்பிலேயே பிள்ளைகளுக்கு உள்ளதாகக் கல்வியியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஒரு மொழியைக் கற்பதற்கான அவசியத்தை பிள்ளை உணர்ந்தால் மாத்திரமே பிள்ளைக்கு அதற்கான உந்துதல் கிடைக்கும்.
புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கற்கிறார்களா? தமிழ்மொழியைக் கற்பதால் அவர்கள் அடையக் கூடிய நன்மைகள் யாவை? மொழியைக் கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்களா? அதற்கான போதிய பயிற்சிகளை அவர்கள் பெற்றிருக்கின்றார்களா? அதற்குப் பொருத்தமான பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா? அதற்கான சூழல் கற்பித்தல் மையங்களில் உள்ளதா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு முறையான விடைகளைத் தேடும் போதே, புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்வியின் எதிர்காலம் தொடர்பில் சரியான நிலைப்பாட்டுக்கு வர முடியும். எனவே, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அது தொடர்பில் புலமையுடன் கூடிய கவனத்தைச் செலுத்துதல் அவசியமானது.
தமிழ் மொழியைக் கற்பிப்பதில் அதீத ஆர்வம் காட்டும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது எதனால் நிகழ்கிறது? தமது பெயர் தொடர்பான விளக்கத்தைத் தெரிந்து கொள்வதன் ஊடாகக் கூட தமிழ்மொழியின் அருமை பெருமைகளைத் தமது பிள்ளைகள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவர்கள் ஏன் தமது பிள்ளைகளுக்கு மறுக்கிறார்கள்?
அண்மையில் தமிழ் நாட்டின் கீழடியில் கிடைத்த களிமண் பானைகளில் கிடைத்த பெயர்களைக் கொண்டு அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை நாமறிவோம். தமிழர்களின் மூவாயிரம் ஆண்டு நாகரிக வரலாறு தொடர்பில் பெருமை கொள்ளும் நாம், இன்னும் ஆயிரம் வருடங்களில் எமது வரலாறு எழுதப்படும் போது, எமது பெயர்களைக் கொண்டு எம்மைத் தமிழர்கள் என்று அடையாளம் காண முடியாமல் போகும் அபாயம் தொடர்பில் உணர்ந்திருக்கின்றோமா?
நவீன உலகு சவால்கள் நிறைந்ததாக உள்ளது. எமது தலைமுறையில் நாம் எதிர்கொண்ட சவால்களை விடவும் அதிக சவால்களை தற்போதைய தலைமுறை எதிர்கொள்கின்றது. சவால்களை சிறப்பாக எதிர்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாக விளங்க முடியும். இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள தமிழ்மொழி அறிவு இன்றைய தலைமுறைக்கு அல்லது அடுத்து வரும் தலைமுறைக்கு எந்த வகையில் உதவப் போகின்றது?
நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு இல்லையாயின் அதனை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறோம்? அதனைச் செய்வது யார்?
திராவிட மொழிக் குடும்பத்தில் முதன்மையான மொழியாகத் தமிழ் உள்ளது. உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாகவும் அது உள்ளது. பல நூற்றாண்டுகளாக, பல்வேறு போர்களையும், பிறமொழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சமாளித்து நின்று நிலைத்த எம் தாய் மொழி தொடர்ந்தும் அவ்வாறு நிலை கொள்ள வேண்டுமாயின் அது தன்னைப் புடம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இன்றைய அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமாயின் அதன் வேர்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம். தமிழ்மொழியைப் பொறுத்தவரை அதனை ஒரு பக்தி மொழியாக வளர்த்தெடுப்பதில் காட்டப்படும் ஆர்வம் அதனை அறிவியல் மொழியாக மாற்றுவதில் காட்டப்படுவதில்லை என்ற குறைபாடு பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயே தமிழ் தொடர்ந்தும் வாழும் நிலை உருவாகும். புலம்பெயர் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளால் இந்த விடயத்தில் பாரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினர் வழங்குதல் அவசியம்.
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் என்றென்றும் மதிக்கப்பட வேண்டியவை. அதே போன்று எமது தாய் மொழியாகிய தமிழ் மொழியும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதிலும், தமிழ் மொழி போன்ற உலகின் மூத்த மொழி நிச்சயம் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதனைப் பாதுகாப்பதற்கான வளமும், வலிமையும் தமிழ்க் குடியிடம் இருக்கிறது. முறையான திட்டமிடலும், அதிகார பலமும் இருக்கிறதா என்பதே கவலையுடன் கூடிய கேள்வி.