பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது!
கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20.09.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 நாட்கள் திருவிழா நடைபெற்று 07.10.2022 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் சனிக்கிழமை 08 ஆம் திகதி பாற்பள்ளையத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
இன்று புதன் கிழமை வனவாச நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மகாபாரத கதையினை அடிப்படையாகக்கொண்டு வரலாற்று நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் சடங்குகள் நடைபெறும் இவ்வாலயம் இலங்ககையில் உருவாக்கப்பட்ட முதலாவது திரௌபதை அம்மன் ஆலயமாகும்.
பஞ்ச பாண்டவர்களுக்காக இவ்வாலயம் அமையப்பெற்றதால் இக்கிராமத்திற்கும் பாண்டவர் இருப்பிடமாக ‘பாண்டிருப்பு’ எனும் நாமமும் பெற்றுள்ளது இவ்வாறு மிகவும் பழைமையான இவ்வாலயத்தின் நீண்ட வரலாற்றில் இருந்து சில விடயங்களை சுறுக்கமாக பார்ப்போம்.
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயமானது தாதன் எனும் மாமுனியால்; கலிபிறந்து 4640 ஆம் வருடத்தில் எதிர்மன்ன சிங்க மன்னனின் காலத்தில்; முதலில் அமைக்கப்பட்டதற்கான ஆதாரம் தாதன் கல்வெட்டில் உள்ளது. பின்நாட்களில் இவ்வாலயத்தில் விமலதர்ம சூரியன் மன்னன் 1594 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை தரிசித்து தான தருமங்கள் வழங்கியதற்கான சான்றுகளும் இம்மன்னனின் ஆட்சிக்கால பதிவுளில் இருந்தும் அறியமுடிகிறது.
புதினெட்டு நாட்கள் நடைபெறும் உற்சவ கால திருவிழாக்கள் மகாபாரத சம்பவங்களை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறுகின்றமை இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும் முதல்நாள் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பூசைக்குரிய பொருட்களையும் வழிபாட்டுக்குரிய சிலைகளையும் எடுத்து ஊரின் வடபகுதியை சுற்றி கடலுக்குச்சென்று கடல்குளித்துக் கொண்டு ஆலயத்திற்கு வந்து பூசைகள் நடைபெற்று கொடியேற்றப்படும் ( நடு இரவு கடந்துவிடும்) இரண்டாம் நாள் புதன் கிழமை அதிகாலை கொடியேற்ற திருவிழா பூசையாக நடைபெறும்.பின்னர் மகாபாரதம் படிக்கும் ஏடு தொடங்கும் நிகழ்வு நடைபெற்று தொடர்ந்து மகாபாரதம் பாடி பயன் சொல்லுதல் திருவிழா இறுதி நாள்வரை தொடரும்.
ஏழாம் நாளை திங்கட்கிழமை இரவு கிருஷ்ண பகவான் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வருதல் பாரத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ்ண பகவான் இணையும் சம்பவத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாக இது அமையும் ( சுவாமி எழுந்தருளல்) எட்டாம் நாள் இரவு சுவாமி எழுந்தருளல் திருவிழா பூசை
12 ஆம் நாள் சனிக்கிழமை இரவு கலியானக்கால் வெட்டிவருதல் இடம்பெறும் பதின்மூன்றாம் நாள் இரவு கல்யாணக்கால் திருவிழா
பதினைந்தாம் நாள் செவ்வாய் சோடனை பூசை பதினாறாம் நாள் புதன் கிழமை வனவாசம் செல்லும் நிகழ்வு .
பதினேழாம் நாள் வியாழன் நள்ளிரவு அருச்சுனர் தவநிலை நிகழ்வு பதினெட்டாம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை தீக்குழி மூட்டல் இடம்பெற்று மாலை தீப்பாய்தல் இடம்பெறும்.
மறு நாள் சனி பொதுமக்கள் பொங்கல் வைத்தலும் தீக்குழிக்கு பால்வார்த்தல் பாற்பள்ளயம் இடம்பெற்று மாலை சுவாமி மீண்டும் மாணிக்க பிள்ளையார் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுதத்ல் செல்லல் இடம்பெறும்.
18 நாட்கள் திருவிழக்கள் சிறப்பாக நடைபெறுவதுடன் ஆலய உற்சவ காலத்தில் இப்பிரதேசமே கோலாகலமாக காட்சியளிப்பதுடன் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திறளான மக்கள் வருகை தருகின்றனர்.