காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு இந்த பணிப்புரையை நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்திருந்தார்.
கொழும்பு மாவட்டச் செயலாளர், பாதுகாப்பு படையினர், தீயணைப்புப் படை, சுகாதாரத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்படி, தீயை அணைக்க தேவையான அதிகபட்ச தலையீட்டை வழங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக இந்நிலைமையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகள் தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளார்.