வெயங்கொடை பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
20 வருடங்களுக்கு முன்னதாக குறித்த பெண் காதலித்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக காதல் முறிந்ததைத் தொடர்ந்து இந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளதோடு, அவர்களுக்கு 9 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
உயிரிழந்த பெண் வத்துபிட்டிவல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த பெண்ணின் பழைய காதலன், கடந்த சில வருடங்களாக இவருடன் தொடர்புகொள்வதற்கு முயற்சித்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அந்த பெண் இதனை நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்குவதற்கு சந்தேகநபர் தீர்மானித்தே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பெண் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த அத்தனகல்ல பொலிஸார், தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
