உறுப்பினர் புவனேஸ்வரிக்கு இறுதி மரியாதை செலுத்தியது கல்முனை மாநகர சபை
(அஸ்லம் எஸ்.மௌலானா)
காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி அஞ்சலியுடன் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் விசேட இரங்கல் செய்தியும் அவரது பிரதிநிதியினால் இங்கு வாசிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வுக்காக பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள அமரர் புவனேஸ்வரியின் வீட்டில் இருந்து அவருடைய பூதவுடல் தாங்கிய ஊர்தி, கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மாநகர சபை வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன்போது மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகளும் இறுதி மரியாதை செலுத்தினர்.
மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ஏ.ஆர்.அமீர், கதிரமலை செல்வராசா, ஆரிக்கா காரியப்பர், சுஹைல் அஸீஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் ஆகியோர் இரங்கல் உரைகளை நிகழ்த்தினர்.
இதன்போது அமரத்துவமடைந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் சிறந்த குணாதிசயங்கள், நற்பண்புகள், அவரால் முன்னெடுக்கப்பட்ட சமூக நலன்சார் சேவைகள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் சகோதரர்கள் ஏற்புரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் புதல்வர் உட்பட குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்பினராக பதவி வகித்து வந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தி, திடீர் சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (15) இரவு தனது 53ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது



