புவனேஸ்வரியின் திடீர் மறைவு கல்முனை தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்;
முதல்வர் றகீப் அனுதாபம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சிறந்த சமூக சேவகராக திகழ்ந்த மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி அவர்களின் திடீர் மறைவானது எமது மாநகர சபைக்கும் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி விநாயகமூர்த்தி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை (15) இரவு காலமானார். அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் முதல்வர் றகீப் மேலும் தெரிவித்திருப்பதாவது;
எமது சபை உறுப்பினர் புவனேஸ்வரி உடல் நலம் தேறி மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேரிடியாக வந்த மரண செய்தியினால் நான் அதிர்ச்சியும் துயரமுமடைந்துள்ளேன். கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட புவனேஸ்வரி அவர்கள், அப்பதவியின் ஊடாக மிகவும் பொறுப்புணர்வுடன் தான் சார்ந்த சமூகத்திற்கும் பாண்டிருப்பு பிரதேசத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியிருக்கிறார்.
அன்னாரது மறைந்த கணவர் துரை என்று அழைக்கப்பட்ட அமரர் விநாயகமூர்த்தியும் ஒரு சிறந்த அரசியல்வாதியாக, சமூக சேவகராக செயற்பட்டதன் காரணமாக அவரது பக்க துணையுடன் நிறைய சமூக சேவைகளை புவனேஸ்வரி முன்னெடுத்திருந்தார். பாண்டிருப்பு பிரதேசத்தில் பல வீதிகளை புனரமைப்பு செய்திருப்பதுடன் அங்கு முதன் முறையாக காபர்ட் வீதி அபிவிருத்தித் திட்டத்தையும் புவனேஸ்வரியே மேற்கொண்டிருந்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்த ரவூப் ஹக்கீமின் ஊடாக பல கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பாண்டிருப்பு பிரதேசத்தில் காபர்ட் வீதி உட்பட மைதானம், மையவாடி போன்றவற்றை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்திருந்தார். சமூக சேவையாற்றுவதில் எப்போதுமே அவர் கூடிய கரிசனை காட்டி வந்துள்ளார்.
இவ்வாறு மக்கள் பணியில் துடிப்புடன் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, இறந்துள்ளார். இதனால் இன்று சிறந்த சமூக சேவகரை கல்முனை மண் இழந்திருக்கிறது. இவரது திடீர் மறைவு கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கும் எமது மாநகர சபைக்கும் குறிப்பாக முதல்வராகிய எனக்கும் பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
புவனேஸ்வரி அவர்கள் எமது மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தபோதிலும் எனது மாநகர ஆட்சி நிர்வாகத்திற்கு என்றும் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார். மிகவும் கஷ்டமான தருணங்களில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்திருக்கிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருக்கவில்லை.
எல்லோருடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகி வந்த புவனேஸ்வரி அவர்கள் ஓர் அமைதியான பெண் ஆளுமையாகத் திகழ்ந்தார். இறைவன் நாட்டப்படி குறுகிய காலத்தினுள் அவர் எம்மை விட்டும் பிரிந்து விட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு மாநகர சபையின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்- என்று குறிப்பிட்டுள்ளார்.