எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!
கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாகவும் அரச சேவைகளை பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் இன்று கல்முனையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக செயற்பாடுகளில் மூக்கை நுழைத்து மக்களுக்கான சேவைகளை பெறுவதில் தடையாக இருக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் இன்று தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்முனை 1 டி கிராம சேவகர் பிரிவில் இருந்த அரச காணிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தன. அதற்கான உறுதிப் பத்திரங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்காது முடக்கி வைத்திருந்ததற்கு எதிராகவும் அந்த உறுதிப் பத்திரங்களை தற்போது கல்முனை தெற்கு ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விட்டதற்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு பிரதேசத்தில் உட்பட்ட எங்களுடைய காணி உறுதி பத்திரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு ஊடாகவே பெற்றுக் கொள்வோம் எனும் கோரிக்கையை. மக்கள் முன் வைத்தனர்.
கல்முனை தெற்கு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு சென்று மகஜரை கையளித்திருந்தனர்
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜர் ஒன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மகஜரில் உள்ளடங்கிய விபரம் வருமாறு
பொது மக்கள் ( சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, அரச காணிக்காக விண்ணப்பம் செய்தோர் )
கல்முனை 01 D
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
கல்முனை வடக்கு.
சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, அரச காணிகளுக்காக விண்ணப்பம் செய்த விடயம் தொடர்பான மகஜர்.
- 2004 சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த நாங்கள்,எமது பகுதியில் உள்ள அரச காணிகளுக்காக எமது பகுதி கிராம சேவகர் ஊடாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தோம்.
- எமது விண்ணப்பங்கள் எமது பிரதேச செயலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமது விண்ணப்பங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைப்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இறுதி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் எமது ஒப்பங்களும் பெறப்பட்டது.
- குறித்த அரச காணி அளிப்பு விண்ணப்பங்கள் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் எமக்கு ஜனாதிபதியினால் வழங்கப்படும் அளிப்பு பத்திரங்கள் கிடைக்க பெறவில்லை.
- கடந்த வாரம் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் எமக்கு கடிதம் ஒன்று கிடைக்க பெற்றது. அக்கடிதத்தில் 12 ம் திகதியான இன்று எமக்கான ஜனாதிபதியின் அளிப்பு பத்திரங்கள் வழங்க உள்ளதாகவும், தேசிய அடையாள அட்டை உடன் மு. ப 10 மணிக்கு கல்முனை தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்துக்கு வருமாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- கல்முனை 01 D கிராம சேவகர் பிரிவு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் ஒரு பிரிவாகும். எங்களுக்கான காணி விண்ணப்பத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே செய்திருந்தோம். ஆனால் எங்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் என்ன காரணத்துக்காக எங்களுக்கு வழங்கி வைக்கிறது ! என்பது எங்களுக்கு தெரியவில்லை.
- குறித்த அளிப்பு பத்திரங்கள் 4 வருடங்களுக்கு முன்னர் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறெனில், ஏன் இந்த கால தாமதம் ?
- நாங்கள் அரச காணிகளை கோரி விண்ணப்பம் செய்தது, எமது பிரதேச செயலாகமான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே. ஆகவே நாங்கள் எமக்கான ஜனாதிபதியினால் வழங்கப்படும் அளிப்பு பத்திரங்களை எமது பிரதேச செயலகமான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே பெற நாங்கள் விரும்புகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கோரிக்கையையும், எமது சந்தேகங்களையும் தங்களுக்கு தெரியப்படுத்தி இந்த மகஜரை உங்களுக்கு வழங்குகிறோம்.
இதில் அரச காணிக்காக விண்ணப்பம் செய்தோர் கையொப்பங்கள் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளோம்.
நன்றி.













