பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 10/09/2022 (சனிக்கிழமை) பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அபராஜிதன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் திரு. திவாகர் ஆகியோர் தலைமையில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடைபவனியும், வீதி நாடகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பெக் (PAC) குழுமத்தின் பிராந்திய செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்ச்சங்கம் பாரம்பரிய கிராமிய கலைமன்றம் – சந்திவெளி, ‘அ’ கலையகம், மண்முனை வடக்கு இளைஞர் கழகம், ரிதம் கழகம், உணர்வுள்ள உறவுகள் அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மைக்காலங்களில் உலக அளவில் தற்கொலை செய்து வாழ்வை மாய்த்துக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அவற்றை தடுக்கவேண்டியதும், நம்பிக்கையூட்டவேண்டியதும் எம் அனைவரினதும் கடைமையாகும்.
கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இயங்கிவரும் பெக் (PAC) குழுமம் பாடசாலை மட்டத்திலும், கிராமிய மட்டங்களிலும் உளவியல் சார் செயற்திட்டங்களை நிகழ்த்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் மாத்திரம் தனது சேவையை இதுவரைகாலமும் மட்டுப்படுத்தியிருந்த Pac குழுமம் கடந்த ஆண்டுமுதல் சர்வதேச அளவில் தனது சேவையை விஸ்தரித்து தேவையுடையோருக்கான ஆலோசனைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கையையும் ஊட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வானது கல்லடிப்பாலத்திலிருத்து ஆரம்பித்து பிரதான வீதியினூடாக நடைபவனியாக சென்று காந்திப்பூங்காவில் நிறைவடைந்தது. அங்கு சுவாமி விபுலானாந்தா அழகியற்கற்கைகள் நிறுவன உதவி விரிவுரையாளர்களான திரு.ந.வர்ணராஜ் மற்றும் திரு.மு.கேமராஜ் அவர்களின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

PAC ஊடகப்பிரிவு