இயற்கை விவசாயத்தை எப்போதும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எளிமையாக கற்றுக் கொடுக்கும் விவசாயப் போதனாசிரியர் சூரியகுமாரன் சிவதாஸ் (மாவடியூர்) அண்ணையின் 07.09.2022 மறைவு உண்மையில் இயற்கை ஆர்வலர்களுக்கு, இயற்கை விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். யாழ் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வவுனியா ஈச்சங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவர்.
தற்போது வவுனியா விவசாயத் திணைக்களத்தின் #முருகனூர் #பண்ணை முகாமையாளராக விளங்கி இருந்தார்.
கொரோனா தீவிரமாக பரவிய காலங்களிலும் சுகாதார நடைமுறைகளை பேணி இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடாத்தினார்.
பல்வேறு நகைச்சுவைகளுடன் இயற்கை விவசாய தகவல்களை சுவாரஷ்யமான முறையில் கூறும் ஆற்றல் பெற்றவர்.
ஏர்முனை என்கிற இயற்கை விவசாயம் சார் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து எளிமையான முறையில் விவசாயிகளுக்கும் புரியக்கூடிய இலகுதமிழில் பல்வேறு கட்டுரைகள், பதிவுகளை எழுதி வந்தார்.
தான் சந்தித்த இயற்கைவழி விவசாயிகளின் அனுபவங்களில் இருந்தும், தான் கற்ற இயற்கை விவசாயம் தொடர்பான நூல்கள் பார்த்த வலையொளி காணொளிகளில் இருந்தும் எடுத்துத் தொகுத்த பல்வேறு பூச்சிவிரட்டிக் கரைசல்கள், சேதன வளமாக்கிகள் மற்றும் இயற்கை பசளைகள் தொடர்பிலான விடயங்களை பல ஆண்டுகளாக தொகுத்து அதனை தனியொரு ஏர்முனை சிறப்பிதழாக வவுனியாவில் வைத்து வெளியிட்டார். அது இன்றும் இயற்கை விவசாயிகளுக்கு ஒரு கையேடாக விளங்குகின்றது.
குறித்த ஏர்முனை சிறப்பிதழை படிக்க: https://noolaham.net/project/853/85228/85228.pdf இவரது எழுத்தில் ஓவியக் கலைஞர் சங்கருடன் இணைந்து இவர் வெளிக்கொண்டு வந்த கருத்தோவியங்கள் விவசாயிகள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விவசாய தொழிநுட்பங்களையும் இலகுவாக விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றவர்.
மன்னாரின் பெரியமடுவில் தான் விவசாயப் போதனாசிரியராக இருந்த காலத்தில் பண்ணைப் பெண்கள் அமைப்பு சிறப்பாக இயங்க வழிகாட்டினார்.
அங்கே இயற்கை பசளைகள், இயற்கையான பூச்சி விரட்டிகளைக் கொண்டு மரக்கறி பயிர்களை பயிர்செய்ய ஊக்குவித்தார்.
இலுப்பை, பனை உள்ளிட்ட பல்வேறு மரங்களை பண்ணையில் நாட்டினார்.
தொடர்ந்தும் இயற்கை விவசாயம் சார் பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்து அப்பெண்களின் ஆளுமை வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். இயற்கை வழி இயக்கத்தோடும் இணைந்து இயங்கியவர்.
கீழே உள்ள கருத்தோவியமொன்றுக்கு மேலும் வலுச் சேர்க்கும் அவரது எழுத்து கீழே, “மலடாகிப் போன எம் தாய்மண்ணை வளமாக மாற்றிடுவோம். நலமாக எளிதான சேதனங்கள் முறையாக சேர்த்து மாண்புள்ள எம் மண்ணை மாற்றிடுவோம் வளமாக…”
இறுதியாக இயற்கை வழி இயக்கத்தினால் வெளியிடப்பட்ட இயற்கை வழி இதழுக்கு “சங்கதி கூறும் சக்கடத்தார்” என்கிற தலைப்பில் விவசாயிகளை விழிப்புணர்வு செய்வதற்காக எழுதிய விடயம் வருமாறு,
“ஓ – அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். அழிவுப்பாதையில போற விவசாயத்தை பார்க்க உடல் முழுக்க விறைக்குது பாருங்கோ. அதாலை என்ர மனசுக்கு பட்டதைச் சொல்லுறேன்.
நல்ல முடிவை எடுக்க வேண்டியது நீங்கள் தான் பாருங்கோ. முந்தின காலத்துல பொம்பிளையளுக்குத்தான் தலைச்சுற்றும், வாந்தியும் வாறது. இப்ப எங்கட விவசாயிகளுக்கெல்லே அதிகம் வருகுது.
ஏன் தெரியுமே, கண் கெட்ட மருந்து பாவனையாலே தான் பாருங்கோ. அது மட்டுமே! ஓடித்திரியிற செண்பகமும், பாடித்திரியிற புலுனிக்குருவியும் இல்ல இப்ப.
மூண்டு வீட்டுக்கு ஒருத்தருக்கு புற்றுநோய். மண்ணை வெட்டினாலும் மண் புழுவைக் காணலை. இது எல்லாம் பசுமைப்புரட்சி என்கிற மாயையில் விவசாயிகள் மதி மயங்கியதால வந்த வினை பாருங்கோ.
இதுக்கெல்லாம் நல்ல முடிவிருக்கு. அங்க இஞ்ச அலையத்தேவையில்லை. உள்ளங்கையில நெய் இருக்கு. உணர்ந்தா இந்த உலகம் உய்யும். மறந்தா மனிதம் மறையும். சரி சரி அடுத்த முறை சந்திச்சு சங்கதியை சொல்லுறன். அப்ப வரட்டே….” #மாவடியூர் சூ. சிவதாஸ்- #சூரியகுமாரன் #சிவதாஸ்