கொதிநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்
எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு
**பிரதேச செயலகம் அதிகாரத்துடன் செயல்படும் போது எல்லை நிர்ணயமும் நடக்க வேண்டும் – கருணாகரம் எம்.பி
30 வருடங்களுக்கு மேலாக செயல்படும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை செயல் இழக்க செய்யும் சதி முயற்சியில் சில முஸ்லிம் அரசியல் சக்திகள் ஈடுபட்டு வருவது ஊர்ஜிதமாகி இருக்கிறது.
காணி அதிகாரம் பறிக்கப்பட்டது ; பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோபூர்வ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது, கணக்காளர் நியமனத்தை தடுப்பது உட்பட பல விடயங்களின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் உட்பட பலர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆட்சிக்கு வருகின்றவர்களை பிடித்துக் கொண்டு ஓர் இனத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது மிக மோசமான நடவடிக்கை என தமிழ் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
30 வருடங்களுக்கு மேலாக செயல்படுகின்ற ஒரு பிரதேச செயலகத்தை,தரம் குறைத்து இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றார்கள். பிச்சைக்காரனுக்கு புண் போல, ஹரிஷ் போன்றவர்களுக்கு கல்முனையில் இனவாதத்தை தூண்டுவது, அவரது இருப்பை தக்க வைப்பதற்கான சுயநல அரசியல் என தமிழர் தரப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றது.
இந்தப் பிரச்சனைக்கு எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி, குழப்பியடிப்பதும் காலம் தாழ்த்துவதும் முஸ்லிம் தரப்பினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற செயலாக இருக்கிறது.
எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியம் தான். ஆனால்,இருக்கின்ற பிரதேச செயலகத்தை செயல்படுவதற்கும் இடையூறுகள் ஏற்படுத்தாமல், எல்லை நிர்ணயத்தை புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஆலோசனை நடத்தி செய்யப்பட வேண்டிய ஒன்று.
எல்லை நிர்ணயம் செய்யப்படாமலே பிரதேச செயலகத்தை செயல்படுத்த முடியும். வவுனியா உட்பட பல பிரதேசங்களில் எல்லை நிர்ணயம் செய்யப்படாமலே பிரதேச செயலகங்கள் செயல்படுகின்றன.
பறிக்கப்பட்டுள்ள காணி அதிகாரம், கணக்காளர் நியமனத்தை தடுப்பது, உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டமை ஆகிய மூன்று விடயங்களையும் மீண்டும் வழங்கி பிரதேச செயலகத்தை செயல்படுவதற்கு இடம் அளிக்க வேண்டும்.
பிரதேச செயலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுதே, புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து எல்லை நிர்ணயத்தை செய்யக்கூடியதாக இருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.
இந்த கல்முனை வடக்கு பிரதேச விவகாரம், தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுபூர்வமான விடயமாக இருப்பதால்,இப்போதைக்கு எல்லை நிர்ணயம் செய்யாமல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை செயல்பட வைப்பது தான் ஆரோக்கியமான நடவடிக்கை. இது எந்த ஒரு இனத்துக்கும் பாதிப்பாக அமையாது என்றும் கருணாகரம் பரிமாணத்திடம் கூறினார். என்றாலும்,இனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்றும் கருணாகரம் கூறினார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – எல்லை நிர்ணயமென மீண்டும் காலத்தை இழுத்தடிக்க இடமளிக்க முடியாது – அனைத்து தமிழ் தலைமைகளும் கூட்டாக ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென தமிழர் தரப்பில் உரத்துச் சொல்லப்படுகிறது.
காலத்துக்கு காலம் வரும் அரசாங்கத்துடன்,இனவாத முஸ்லிம் அரசியல் கும்பல்கள் எல்லை நிர்ணயம் எனக் கூறி காலத்தை இழுத்தடித்து வரும் சூழ்ச்சிகள் தொடர்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லை,கல்முனை நகர் தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகின்றமை அடிப்படை என்பதும் குறிப்பிடத்தக்க ஆகும்.
மிகக் குறுகிய காலத்தில் கல்முனை வடக்கு பிரதேசத்தில் காணி அலுவலகம் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அரச இணையத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக இணைப்பு,29 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பான விபரங்களும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வுகள் எட்டப்படாது மாறாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டமையானது,கல்முனை பிராந்திய தமிழ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம் , தவராசா கலையரசன் ஆகியோர் சில தினங்களின் முன்னர் பிரதம மந்திரியை சந்தித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தாமதியாது தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கான தீர்வு வெள்ளிக் கிழமைக்கு முன்பு எட்டப்படும் என பிரதமரால் உறுதியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 31.08.2022 இன்று சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம மந்திரியை சந்தித்து முதலில் எல்லை நிர்ணயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
எல்லை நிர்ணய விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று பல மாதங்கள் கடந்தும் தீர்வு எட்டப்படாத நிலையில் ,மாறி மாறி ஆட்சிகள் மாற்றங்கள் இடம்பெற்றும் இருந்தன ஆனால் தீர்வுகள் எதுவும் இல்லை.
மீண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அதற்கான தீர்வை உடனடியாக வழங்குவதற்கு பதிலாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பேசி மீண்டும் காலத்தை இழுத்தடிக்கும் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது.
இந்த விடயங்களை அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்தித்து கல்முனை பிரதேச தமிழ்,சிங்கள மக்களின் அரச நிர்வாக சேவையை சீராக பெறுவதற்குரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேசத்துக்குரிய விடயங்கள் இவ்வாறு தீர்வு இன்றி தொடர்ச்சியாக மக்களின் நியாயமான கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவதானது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கும் குறிப்பிட்ட ஓர் இனத்துக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் அரசாங்கம் இடம் அளிக்கக் கூடாது. இதுவே, இன்று கல்முனை மக்களின் கோரிக்கையாகும்.