நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முறையான அறிவிப்பு நாளைய தினம் வெளியிடப்படும் என இந்த விடயத்தை நேரடியாக அறிந்த தரப்புக்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
3 பில்லியன் டொலர் கோரல்
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது.
இந்த நிலையில் கடன் இணக்கம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழு, திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.