தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது சட்ட ரீதியாக ஆளணி பௌதிக வளங்களுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி இயங்கி வருகின்றது.
இதற்குரிய அதிகாரங்கள் கிடைப்பதை தொடர்ச்சியாக தடுத்து வரும் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தங்களுக்குள் கட்சி வேறுபாடுகள் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழருக்கு எதிரான ஒரு விடயத்தை நிறைவேற்றுவதில் ஒற்றுமையாக செயல்படுகின்றார்கள்.
அண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக காணி அலுவலகம் நீக்கப்பட்டு இருந்தது. தற்போது இணையதளத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் நீக்கப்பட்டு கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதியை தட்டிக் கேட்க இதற்குரிய தீர்வு காண தமிழ் அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்து கல்முனைத் தமிழருக்கு தீர்வு காண ஒன்றிணையவேண்டும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக தமிழருக்கு எதிரான அநீதிகள் இடம் பெறுகின்ற போது மௌனமாக இருப்பதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதும் மிகவும் வேதனையான விடயமாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக முப்பதாயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டன.இது கல்முனை வடக்கு பிரதேச விடயத்தில் தமிழ் தலைமைகள் தீர்வை பெற்று தராததினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது அதிருப்தி அடைந்த மக்கள் அந்த வாக்கை எதிராக அளித்திருந்தார்கள். இந்த வாக்கு கருணாவுக்கான வாக்குகளல்ல ஒரு தும்புத்தடியை வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் அந்த வாக்குகள் அளிக்கப்பட்டு இருக்கும் என்பது தான் யதார்த்தம்.
முதலமைச்சர் கனவு காணுபவரும் கட்சி தலைமை கனவு காணுபவரும் தமிழ் மக்களுக்கு எதிரான சக்திகளோடு சோரம் போய் போகின்றார்களா? சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இனியும் தாமதிக்காமல் உடனடியாக அனைத்துக் கட்சித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்றார்.