மட்டக்களப்பின் வடக்கில் அமைந்துள்ள சவுக்கடி கிராமம் பல்வேறு விதங்களில் நலிவுற்றதாய் காணப்படும் ஓர் சமூகத்தின் நெடுங்கால வாழ்விடமாகும்.
போசாக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் சாதாரணமாக காணப்படும் நிலையில் வளங்கள் சூறையாடப்படுவது பெரியதோர் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இவற்றோடிணைந்த பல காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இக்கிராமத்தினை கிழக்குப்பல்கலைக்கழகம் தத்தெடுத்தது ஓர் மாதிரிக்கிரமமாக அபிவிருத்திசெய்ய திட்டமிட்டுள்ளநிலையில் அதன் முதல் அங்கமாக ஒன்றிணைந்த மருத்துவ முகாம் மற்றும் தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக சமூகம் மற்றும் தொழிற்றுறைகளை பல்கலைக்கழகத்தோடிணைக்கும் பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியோரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோர் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இம்முகாமில் பல்கலைக்கழக பதிவாளர், நிதியாளர், இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், ரோட்டரி கழகத்தினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் குறித்த மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இக்கிராமத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கடல் வளம் நிலத்தடி நீர், சிறு குளங்கள் மற்றும் வாவி போன்ற இயற்கை வழங்களுடன் மனிதவளமாக அநேக இளைஞர்கள் இருப்பது சிறப்பம்சமாகும். எனவே பல்கலைக்கழகமாக அனைத்து பீடங்களும் இணைந்து இக்கிராமத்தினை அபிவிருத்திசெய்து ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதே எமது திட்டமும் எதிர்கால பணியுமாகும் என குறிப்பிடடார்.
இதற்கான பாலமாக பல்கலைக்கழகத்துடன் சமூகம் மற்றும் தொழில்துறையை இணைக்கும் பிரிவு அதன் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அருளானந்தம் அவர்களின் வழிநடத்தலில் செயற்படும் எனவும் குறிப்பிடடார்.
மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன், பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர் பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமுகாமை ஆரம்பித்து வைத்ததுடன் சவுக்கடி கிராம அபிவிருத்தியில் பல்கலைக்கழகத்துடன் கைகோர்ப்பதாகவும் தெரிவித்தது சிறப்பம்சமாகும்.
விசேடமாக மட்டக்களப்பு ரோட்டரி கழகம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியதுடன் றோட்டரியனும் பல்கலைக்கழக பதில் துணைவேந்தருமாகிய வைத்திய கலாநிதி கருணாகரன் அவர்கள் முகாமில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
அரச அதிகாரிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சவுக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வைத்தியர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ஆகியோர் இணைந்து ஒரு நோக்கத்திக்காக செயற்பட்டது, நல்லதோர் ஆரம்பமாகும் என பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
காலை 9 மணிமுதல் மருத்துவ முகாம் இடம்பெற்றதுடன் மாலை 3 மணிமுதல் கிராமத்தினுள் மருத்துவ கற்கை மாணவர்களினால் தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் மற்றும் சமூகம் சார்ந்த சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு கல்வி நிகழ்வும் இடம்பெற்றது.
இம்மருத்துவ முகாமிற்க்கான சகல ஒழுங்கமைப்பையும் கிராம உத்தியோகத்தர் தலைமையில் சவுக்கடி மத்தி , சவுக்கடி கிழக்கு, சிவபுரம் ஆகிய கிராமங்களின் கிராம அபிவிருத்திச்சங்கங்களும் சமுர்த்தி சங்கங்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதுடன், அத்துடன் சவுக்கடி பாரதி வித்தியாலய அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் இடத்தினை ஒழுங்கமைத்திருந்தனர்.