சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறது
கல்முனை மாநகர சபை
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான அதிகூடிய வாகன வாடகைக் கட்டணமாக பொதியொன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்பட வேண்டும் என மாநகர சபை வரையறுத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி, சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான கட்டணத்தை முறையற்ற விதத்தில், விரும்பியவாறு அதிகரித்து, அறவிடுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இன்று வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
இதன்படி 100 பொதிகளுக்கு மேல் ஏற்றப்பட்டால் 50 ரூபா வீதமே கட்டணம் அறவிடப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்தும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்ய்யப்பட்டு, அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதியின்றி இவ்வாறான சேவையில் ஈடுபடுவது சட்டவிரோதமாகையினால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹார்ட் வெயார் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்த கட்டணங்களை உறுதிப்படுத்திய பின்னரே சீமெந்து பொதிகளை வாகனங்களில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் இந்த விடயத்தில் தவறிழைக்கும் ஹார்ட் வெயார் மற்றும் விற்பனை நிலையங்களின் வியாபார உரிமம் இரத்து செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
