மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த மயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி செங்கலடியில் இன்று(17) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கால்நடை பண்ணையாளர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
மட்டக்களப்பு, செங்கலடி சந்தியில் ஒன்றுகூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.
போராட்டத்தில், அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்து, மயிலத்தமடு மாதவனையில் தமிழர்களின் கால்நடைகளை அழிக்காதே, பௌத்தமயமாக்கலை நிறுத்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல்வேறு நிதி அமைப்புகள் ஊடாக பெறப்படும் கடன்களைக்கொண்டு தமிழர்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் கடன்களை நிறுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட மனு வாசிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
தமிழர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் உலக நாடுகளின் நிதியுடன் இனவாத கட்டமைப்பாக செயற்படும் மகாவலி அபிவிருத்தி சபை தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக்கொண்டு வன்முறை வழியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனையில் நூறு வருடங்களுக்கு மேல் கால்நடைகளை தமிழர்கள் மேய்த்துவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ் கால்நடை பண்ணையாளர்களை அகற்றி அங்கு பௌத்த மயமாக்கலை செய்யும் நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி சபை முன்னெடுபப்தாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பண்ணையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.