பாறுக் ஷிஹான்
அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்கபுரியாகவே இருந்து வருகின்றது.
இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாக உள்ளன. இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதெனலாம்.
எமது நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் ஒரேயொரு முறையுடன் பயணத்தை நிறுத்திக் கொள்ளாது வருடா வருடம் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு எமது நாட்டின் பூகோள அமைப்பே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அதாவது 12 மணி நேரத்தில் சூடு, குளிர் மிதமான காலநிலையினை அனுபவிக்கக் கூடிய ஒரே ஒரு நாடாக உள்ளதே மூலகாரணம் என கூற முடியும். காலையில் அம்பாறை அறுகம்பை கடற்கரையில் கடலலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு விட்டு மதியம் நுவரெலியாவில் ஓய்வு எடுக்கக் கூடிய சூழ்நிலை இருப்பது எமது நாட்டிற்கு அதிக மதிப்பெண்ணாக உள்ளதெனலாம்.
முன்னர் யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட புராதன இடங்களுக்கு மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் கரையோரப் பிரதேசங்களின் எழில்மிகு அழகிய காட்சிகளை கண்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இதன் மூலமாக அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாயிற்று. இதனால் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு தோன்றியுள்ளது.
எமது நாட்டில் உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்திருக்கின்ற இடங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் அறுகம்பை முக்கிய இடத்தில் உள்ளதெனலாம்.
இந்த அறுகம்பை ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பிருந்தே அந்நியர்களின் சிறிய மீன்பிடித்துறைமுகமாகவும் பொழுதுபோக்கு இடமாகவும் இருந்துள்ளது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரசே செயலகப் பிரிவில் அறுகம்பே இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் இது மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். 1996ம் ஆண்டு இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், அறுகம்பே, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது.
அறுகம்பே இயற்கையினால் அழகு நிறைந்த பகுதியாகும்.குறிப்பாக, இங்குள்ள கடற்கரை சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகிற ஒன்றாகும். மேலும், “சர்பிங்” எனப்படும் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு, உலகளவில் மிகவும் சிறந்த இடங்களில் அறுகம்பேயும் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக நாடுகளில் இருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், தற்போது சுற்றுலாப் பயணிகளால் அறுகம்பே களைகட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுநோய் எரிபொருள் நெருக்கடி காரணமாக அறுகம்பே பகுதிக்கு சிறிதளவு சுற்றுலாப் பயணிகள்தான்வருகை தந்திருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக இன்று அதிகரித்துள்ளது.
அறுகம்பேயில் தங்கும் விடுதிகள் உணவுச்சாலைகள் தற்போது உல்லாச பிரயாணிகளின் வருகையினால் புத்துயிர் பெற்று வருகின்றன.
வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி உள்நாட்டவர்களும் அறுகம்பே பகுதிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளாக வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இப்பகுதி மக்கள் 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் இந்நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய கொவிட் – 19 நோய்தொற்று காரணமாக பொருளாதார மற்றும் இயல்பு வாழ்வில் பாதிப்பிற்கு உள்ளாகியதுடன் உல்லாச பிரயாணிகளின் வருகை குறைந்தமையினால் தமது வாழ்வாதாரத்தையும் இழந்து வெளி மாவட்டங்களுக்கு தற்காலிகமாக சென்றிருந்தனர்.
தற்போது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதனால் இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீளவும் குடியேறி தமது ஜீவனோபாய தொழிலை உல்லாச பிரயாணிகளுடன் இணைந்து கொண்டு செல்கின்றனர்.
கொவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை இவ்வாண்டின கடந்த மாதங்களில் இல்லாததானாலும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக காணப்படுவதாலும் பல சுற்றுலாத் தளங்கள் சோபை இழந்திருக்திருக்கிறது. இதனால் சுற்றுலாத்துறைசார்ந்த தொழில் புரிவோரின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று இலங்கையின் கிழக்கு மாகாண மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்கள் களை கட்ட ஆரம்பித்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளிக் கடற்கரை, மாபில் கடற்கரை, திருகோணஸ்வர ஆலயம், கண்ணியா சுடுநீர் கிணறு போன்ற பிரதேசங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா, அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உல்லை மற்றும் அருகம்பை ஆகிய பிரதேசங்கள் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி உல்லாச பிரயாணிகள் படையெடுத்துள்ளனர்.
மேலும் இது தவிர இச்சுற்றுலாத்தளங்கள் அபிவிருத்தி செய்யப்படாமலும், இத்தளங்களுக்குரிய முறையான போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்படாமலும் காணப்படுவதனால் இத்தளங்களை நோக்கிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிட்டுச் சொல்லத்தக்களவு வளர்ச்சியடைந்ததாகக் காணப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.
எதிர்காலத்தில் இப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு போக்குவரத்துக் கட்டமைப்புக்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் இச்சுற்றுலாத்தளங்களினூடாக பிரதேச இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெற காரணமாக அமையும்.
கிழக்கில் வருமானம் ஈட்டித்தரக் கூடிய துறையாக காணப்படும் உல்லாசத் துறையை அபிவிருத்தி செய்வதிலும் உல்லாசப் பயணிகளைக் கவர்வதிலும் கடந்த காலங்களில் முழுக் கவனம் செலத்தி வந்தாலும் அதற்கான விரைவானதும் திருப்பதிகரமானதுமான போக்குவரத்துக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.
உலகிலுள்ள கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த குடா பகுதிகளில் மிகவும் இயற்கையான குடாவாக அறுகம்பைக்குடா இருப்பதாக வெளிநாட்டு பயண கையேடுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனுடன் இணைந்ததாக சர்வதேச ரீதியில் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு மிக பொருத்தமான இடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறுகம்பை பிரதேசம் மேற்குல உல்லாசப் பயணிகளின் வருகையினால் களைகட்டியுள்ளது.
குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் வரை இப்பகுதி மிகுந்த சுறுசுறுப்பாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகளுடன் தென்பகுதி, மீனவர்களின் வருகை இப்பகுதியில் மிகுதியாக காணப்படுவதால் பதப்படுத்தப்படாத புத்தம்புதிய கடலுணவுகளை சுவைப்பதில் வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளதை காணமுடியும்.
தற்போது இங்கு வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளில் பெரும் பகுதியினர் தமது குழந்தைகளுடன் குடும்பமாக வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மாலை வேளைகளில் அறுகம்பை குடா கடற்கரை நீர்ச் சறுக்கு விளையாட்டு, படகுச் சவாரி, கடற்குளியல், மீன்பிடி என களைகட்டியிருக்கும், உள்ளூர் பயணிகள் தமது வாகனங்களை நிறுத்துவதில் பாரிய இடநெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றார்ள். அறுகம்பைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இக்கடற்கரைப் பகுதியை மட்டும் அனுபவிப்பது கிடையாது.
இதனை அண்மித்துள்ள குமண பறவைகள் சரணாலயத்திற்கும் சென்று வருகின்றார்கள். அறுகம்பையிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உகந்தை முருகன் ஆலயத்தின் பின்புறமாகவே குமண சரணாலய பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது.
உல்லாசப் பயணிகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு முன் உகந்தை முருகனை தரிசித்து புகைப்படம் பிடித்து அவரது அருளைப் பெற்றுக் கொள்வதுடன் கூட்டம் கூட்டமாக வலம்வரும் மான் மயில் கூட்டங்கள், பட்சிகளின் ஓசைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.