பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காலி- உனவடுன தேவாலயத்தின் பாதுகாவலர் (கபுவா) கைது செய்யப்படுவதை தடுக்க தலையிட முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று மெட்டரம்ப சதுர மகா தேவாலயத்தின் பாதுகாவலரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களைச் சேர்ந்த 09-15 வயதுடைய ஒன்பது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இரண்டு மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்ப்பதை அவதானித்த காலியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்பளிப்பு வழங்கிய சந்தேகநபர்
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மெட்டரம்ப சதுர மகா தேவாலயத்தின் பாதுகாவலர் பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர், தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு கவர்வதற்காக சிறுவர்களுக்கு 25,000 முதல் 40,000 ஆயிரம் ரூபாவை அன்பளிப்புகளாக வழங்கியுள்ளதுடன், விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளையும் வழங்கியுள்ளார்.
கொழும்பில் இருந்தபோது, சிறுவர்களை அத்துருகிரிய மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்ற சிறுவர்களையும் அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சந்தேக நபர் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையிலும் தோன்றியுள்ளார்.
சந்தேக நபர் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சந்தேகநபரை விடுவிப்பதற்காக செல்வாக்குச் செலுத்திய அதிகாரிகள்
அவருடைய பாதுகாப்பிற்காக சுமார் ஒன்பது மெய்க்காவலர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்தநிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாகாணத்தில் உள்ள பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை விடுவிப்பதற்காக செல்வாக்குச் செலுத்த முயற்சித்ததாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அந்த அதிகாரிகளில் ஒருவர் சந்தேகநபரை, பொலிஸ் அறையில் வைக்க வேண்டாம் என குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை சந்தேகநபர் வியாழக்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.