இலங்கையின் ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
எனினும் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவசரகாலச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீள்பரிசீலனை செய்யுமாறும், திருத்தம் செய்யப்பட்டால் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
லிபரல் இளைஞர் இயக்கத்தின் அழைப்பாளர்களான சட்டத்தரணிகள் நமினி பண்டித மற்றும் ருசிரு எகொடகே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 28ம் திகதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.
