முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வார் என ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாத இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதற்கு உடனடியாக பதலளிக்கவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு கோரிக்கை
அவருக்கு 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் விசா காலம் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாளையுடன் அவரது விசா காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat, கோட்டாபய ராஜபக்ச 90 நாட்களுக்கு நாட்டிற்கு தங்கியிருக்க அனுமதிக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கிறார் எனவும், எனினும், அவர் எப்போது தாய்லாந்து வருவார் என்று தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் இல்லை
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் அடையும் எண்ணம் இல்லை என்றும் அதன் பின்னர் வேறு நாட்டுக்கு செல்வார் என்றும் இலங்கை தரப்பு தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்தால், அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால், அவர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட மாட்டார் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.