மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022
உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க;
“இறுதியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணத்தை திருத்தினோம். அதாவது அக்காலப்பகுதியில் மின்சார கட்டணம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. விசேடமாக மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மூன்று வகையான எரிபொருட்கள் 250 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 143 டொலரில் இருந்து 321 டொலராக அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பின்படி கணக்கிடும் போது, 550 சதவீதம் அதிகரித்துள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 121 ரூபாவிலிருந்து 430 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 350 சதவீத அதிகரிப்பாகும்.
2013 ஆம் ஆண்டு 90 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் கச்சா எண்ணெய் விலை தற்போது 419 ரூபாயாக உள்ளது அதாவது 365 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் டொலரின் பெறுமதி 127 ரூபாவிலிருந்து 368 ரூபாவாக அதாவது 190 சதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறான விலை உயர்வுகளின் காரணமாக ஒரு அலகு (யுனிட்) மின்சார உற்பத்திக்கான செலவு 16 ரூபாவிலிருந்து 32 ரூபா வரை உயர்ந்தது.
மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிப்புடன், இலங்கை மின்சார சபை 183% மற்றும் 229% என இரண்டு முறையில் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இரு முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இரண்டு முன்மொய்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதில் நியாயமான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றே கூற வேண்டும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட விதிகளுக்கு அமைய, இந்தக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, நியாயமான கட்டண திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆணைக்குழு முடிவு செய்தது.
தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 32 ரூபாய் செலவாகிறது என்ற போதிலும், வீட்டு பாவனை நுகர்வோரை பாதுகாக்க முழு செலவினச் சுமையும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. 30 அலகுகளுக்கும் குறைவான நுகர்வினை கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் இன்னும் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு இன்னும் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
31 அலகுகளுக்கு மேல் மற்றும் 60 அலகுகளுக்குக் கீழே மொத்த செலவில் 40 சதவீதம் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 61க்கு மேல் மற்றும் 90க்கு கீழ் உள்ள அலகு வகைகளில் இருந்து 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, 75 சதவீத மின்சார நுகர்வோருக்கு இன்னும் மானியம் வழங்கப்படுகிறது என்றே கூற வேண்டும். புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, மின் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த கட்டணத் தீர்மானத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கலந்துரையாடலின் போது சோலார் கட்டமைப்பு உரிமையாளர்கள் “தங்கள் ஒட்டுமொத்த நுகர்வுக்கு மாதாந்த கட்டணம் அறவிடுவது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டினர். அதன்படி, அவற்றின் மொத்த நுகர்வில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளின் அளவைக் கழித்த பின்னர் பெறப்பட்ட நிகர நுகர்வு அடிப்படையில் நிலையான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஆணைகுழு முடிவு செய்தது. இதன் காரணமாக, நுகர்வை விட உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, சூரிய மின்சக்தி அமைப்புகளை வைத்திருக்கும் மின் நுகர்வோர் மாதாந்த நிலையான கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. “
மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வின் போது 1,324 பேர் மற்றும் நிறுவனங்கள் தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். இதில் 46 பேர் நேரில் கலந்து கொண்டு வாய்மொழிமூலமாக கருத்து தெரிவித்தனர். பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்கள் மின்சாரச் செலவு, நியாயமான விலை மற்றும் மின் சிக்கனத்தின் தேவை ஆகியவற்றின் நியாயத்தன்மையைக் காட்டுகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க;
“பொதுமக்கள் முன்வைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சட்ட விதிகளின்படி புதிய கட்டண முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு நிபந்தனைகளை விதிக்க தீர்மானித்தோம். மின்சாரதனதை கொள்வனவு செய்வது தொடர்பாக, சுயேச்சையாக தணிக்கை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் திகதிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம், பொதுமக்கள் மின்சார கட்டணத்தின் நியாயம் குறித்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். லங்கா மின்சார பிரைவேட் லிமிடெட் கடந்த வருடம் மின்சார நுகர்வோர்களின் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை செலுத்த ஆரம்பித்தது. நுகர்வோர் உத்தரவாத வைப்புத்தொகைக்கான வட்டியை இலங்கை மின்சார சபையும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை செலுத்துதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும்” என்றார்.
சுற்றுலா ஹோட்டல் துறை மற்றும் கைத்தொழில் துறைக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய கட்டண திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் டொலரின் பெறுமதி 190 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த மின் கட்டண திருத்தத்தால் ஏற்றுமதி துறையில் உள்ள தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாது. குறைந்த மின்சார நுகர்வைக் கொண்ட கைத்தொழில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத் தேவைக்கான துறைகளுக்கு இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 116 வீத கட்டண அதிகரிப்புக்கு பதிலாக, பொதுத்துறைக்கு 39 வீத அதிகரிப்பும், கைத்தொழில் துறைக்கு 75 வீத அதிகரிப்பும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களில் 50 சதவீத உயர்வு மட்டுமே ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். ஏனைய 50 சதவீத கட்டண உயர்வு இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத் துறை மீண்டும் வழமைக்கு வரும் வரை ஊக்கத்தொகையாகவும் நிவாரணமாகவும் அமுலுக்கு வரும். மேலும், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்களுக்கு நிவாரணமாக டொலரில் மின் கட்டணம் செலுத்தும் போது 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.