மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் – 2022
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத்
திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் 21ம் நாளான 10.09.2022 திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
மண்டூர் கந்தசுவாமி ஆலயமானது
மட்டக்களப்பின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக விளங்கினாலும் ஆகம நெறிசாரா
பூசைகள் நிகழும் ஆலயங்களில் கதிர்காமத்தை ஒத்திருப்பதால் சின்னக்கதிர்காமம் என்று சிறப்பித்துக் கூறப்படும் புண்ணிய தலமாகும்.
மேலைத்தேய அந்நியர் ஆட்சிக்காலத்தில் இவ்வாலயத்தை அவர்கள் அழிப்பதற்காக முற்பட்ட போது முருகப்பெருமான் குளவிப்படை கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தியதாக வரலாற்று ரீதியான கதையொன்றும் உள்ளது.
மட்டக்களப்பின் முருகன் ஆலயங்கள்
பொதுவாக கிழக்கு நோக்கியே
அமைந்திருக்கும் இந்நிலையில் மண்டூர் முருகனுக்கு தெற்கு நோக்கிய பார்வை இருப்பது கவனிக்கத்தக்கது. இயம
கண்டத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கே இந்நிலை எனக் கூறப்பட்டாலும் கதிர்காமம்
நோக்கிய பார்வையாக இதனைக் கருதமுடியும்.
வேண்டுவோர்க்கு வரமளிக்கும் மண்டூர் முருகப் பெருமானது உற்சவகால நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
