வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (02) திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அமைச்சர் நளின் பெர்னாண்டோ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.
கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், அதற்கு அருகாமையில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள சத்தோச விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், குறித்த சத்தோச விற்பனை நிலயத்தில் காணப்படும் குறைபாடுகளை அதிகாரிகளிடமும், பொருட்கொள்வனவில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடமிருந்தும் கேட்டறிந்துகொண்டதுடன், காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தமக்கு பால்மா இங்கு கிடைப்பதில்லையென கூறியதை தொடர்ந்து அமைச்சர் தொலைபேசி வாயிலாக உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு மாவட்டத்திற்கென இலவசமாக ஒரு தொகுதி பால்மாவை அனுப்பிவைக்குமாறு பணித்ததுடன், சத்தோசையின் விற்பனைக்காகவும் பால்மாவினை அனுப்பிவைக்குமாறும் பணித்திருந்தார்.
அத்தோடு தான் ஜனாதிபதியிடம் கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், மக்கள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள் என கூறியிருப்பதாகவும் இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்களிடம் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் குறித்த கள விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சத்தோச நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.







