20க்கு பேராசைப்பட்ட கோட்டாவுக்கு 20 ஆம் திகதியில் பாடம் கிடைத்தது!

-கேதீஸ் புவிநேசராஜா-

இலங்கைத் திருநாடு உலகப் பந்தில் எப்போதும் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது.

கடந்த கால யுத்தம், இனவழிப்பு, தற்போது பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், பரப்பான அரசியம் மாற்றங்கள் என பல விடயங்களைக் கூறலாம்.

இதில் தற்போது உலக அரங்கில் அதிகம் பேசப்படும் விடயம் “கோட்டா கோ ஹம ” போராட்டம், அதனைத் தொடர்ந்து இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதி மக்கள் எதிர்ப்பினால் நாட்டை விட்டு தப்பிச்சென்றதுடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பு இராஜினாமா செய்த சம்பவம் நிகழ்ந்திருந்ததை குறிப்பிடலாம்.

இவ்வாறு ஒரு படுமோசமான நிலைமையை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய எதிர் கொண்டதற்கான காரணம், அவர்களின் சர்வாதிகாரப் போக்கும், பேராசையுமாகும். இதனை படிப்பினையாக இலங்கையை ஆளும் அரசியல் தலைவர்கள் கவனத்தில் எடுத்து செயற்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் என்பது மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கும்.

” பேராசை பெருநட்டம்” எனும் சான்றோர் வாக்கு பொய்க்கவில்லை. ராஜபக்சகளின் இந்த இனவாத போக்கும் பேராசையும் அழிவுக்கே வழி வகுத்துள்ளது.

எத்தனை உயிர்கள் பழி கொண்டாலும், எந்தெந்த நாடுகளின் கால்களில் விழுந்து கடன்களை பெற்றாலும், நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமானாலும் கவலையில்லாமல் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக மிக மோசமாக இலங்கையில் இன்னும் ஒரு தேசிய இனத்துக்கு எதிராக யுத்தத்தை நிகழ்த்தி இருந்தார்கள். சிங்கள மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்தது என்பதை மாத்திரம் கவனத்தில் எடுத்திருந்தார்களே தவிர இந்த யுத்தம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை சிந்திக்க தவறியிருந்தார்கள். அது மாத்திரமல்ல ராஜபக்சக்களை கடவுள் போன்று தலைமேல் வைத்து கொண்டாடினார்கள். அது ராஜபக்சக்கள் தங்கள் குடும்ப அரசியலை வளர்ப்பதற்கு உந்துதலாக இருந்தது மட்டுமல்லாமல் எது செய்தாலும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற மமதையையும் உருவாக்கி இருந்தது. அந்த ஆணவமும் அவர்களின் பேராசையும் ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் இன்று சீரழித்துள்ளது. இதை மக்களும் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.

யுத்தத்தை வென்றதாக கூறப்படும் ராஜபக்சக்களின் அரசியல் சாம்ராஜ்யம் தவுடு பொடியாகும்வரை நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலைமை இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் தொடர் கதையாக இருந்து வருகின்றமையும் இந்த நாட்டுக்கு ஒரு சாபமாகும். கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினையைப் பெறும் நிகழ்கால அரசுகள் எதிர்கால அரசுகள் இவற்றை சீர் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பொருளாதார நிலைமைகளை மூடி மறைத்த ராஜபக்சக்கள் தொடர்ச்சியாக தங்கள் குடும்பம் இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்கின்ற பேராசையிலேயே அவர்களின் நகர்வுகள் இருந்து வந்தன.
மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாக இருந்தார் அமைச்சராக பல தடவை இருந்தார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் இரு முறை நிறைவேற்ற ஜனாதிபதியாக இருந்தார். இலங்கை அரசியல் யாப்பின்பிரகாரம் ஒருவர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து போட்டி இட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னரும் கௌரவமாக அரசியலில் ஏனையவருக்கு இடம் கொடுத்து விலகி இருக்காமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் இருக்க ஆசைப்பட்டார். தேர்தலில் போட்டியிட்டார். அதுமட்டுமல்ல தனது சகோதரர்களை புதல்வர்களை அரசியலின் உச்ச பதவிகளுக்கு கொண்டுவரும் அவாவோடு செயற்பட்டு வந்தார். தான் பிரதமராக இருந்து கொண்டும் தனது புதல்வரை அமைச்சராக்கியதுடன் தனது ஒரு சகோதரர்களை முக்கிய அமைச்சர் ஆக்கியதுடன் ஆட்சி செய்யும் பிரதான கட்சிக்கும் தாங்களே சொந்தக்காரராகவும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் ஒரு படி மேலே சென்று அடுத்த ஜனாதிபதியாக வருபவரும் தனது சகோதரரே வரவேண்டும் என முயற்சி எடுத்து அதிலும் வெற்றி கண்டார்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையை ஒரு மன்னர் ஆட்சி போன்று தனது குடும்பமே ஆட்சி செய்யும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருந்தார்கள். இனவாதத்தை மக்கள் மத்தியில் விதைத்து வாக்குகளை கவர்ந்ததன் இறுதிக்கட்டம்தான் கோத்தபாய ராஜபக்ஷ அதி கூடிய வாக்குகளோடு ஜனாதிபதி ஆகியமை.

அதிக ஆசை அழிவைத் தரும் என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் இல்லை. சுமார் 69 இலட்சம் வாக்குகளோடு சிங்கள மக்களின் ஒரு துட்டகைமுனுவாக இராஜபக்சக்கள் பார்க்கப்பட்டு கோத்தாபாய ஜனாதிபதியாக சிம்மாசனம் ஏறினார்.

ஆனால் மக்கள் நலன் நாட்டு நலன் என்பவற்றில் அக்கறை இல்லாது தங்கள் குடும்பமே இலங்கை மக்களை ஆட்சி செய்ய வேண்டும் எனும் பேராசையுடன் காய் நகர்த்தல்களை செய்து வந்தார்கள்.

நல்லாட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு மாறாக அதிக நிறைவேற்று அதிகாரங்களோடு தனது ஜனாதிபதி பதவி இருக்க வேண்டும் என்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி இருபதாவது சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

..

மன்னர் ஆட்சி போன்று குடும்ப ஆட்சி தொடர்ந்தது. இவர்களின் இந்த பேராசைக்கு கடவுள் தீர்ப்பாக கடந்த 20ஆம் திகதியில் கோத்தாவின் ஜனாதிபதி காலம் முடிவதற்கு முன்பே புதிய ஒரு ஜனாதிபதி அதே நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யும் நிலைமை உருவாகி இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதில் அக்கறை காட்டாது தங்கள் ஆட்சியை தக்க வைப்பதிலும் தங்கள் கட்சியை வளர்ப்பதிலும் அக்கறை காட்டி செயல்பட்ட ராஜபக்சகளின் பெரும் தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்த இலங்கை மக்கள் இனமத மொழி பேதமின்றி இலங்கை வரலாற்றில் சொல்லொண்ணா துன்பத்தை எதிர்கொண்டார்கள். ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு இறங்கினார்கள் இதனால் இவர்களின் அரசியல் சின்னாபின்னமாகியது. ராஜபக்ச என்ற நாமத்தையே மக்கள் அருவருப்பாக பாக்கும் நிலைமை ஏற்பட்டது.
ஆகவே இலங்கையில் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வரலாற்றுச் சம்பவங்களை இலங்கையின் தற்கால அரசியல்வாதிகளும், எதிர்கால அரசியல் தலைவர்களும், ஒட்டுமொத்த மக்களும் கற்றுக்கொண்ட பாடமாக எடுத்துக் கொண்டு நாட்டின் எதிர்காலம்,சம உரிமை,நாட்டின் சுபிட்சம்,பொருளாதாரம் முன்னேற்றம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனவாதமற்ற இலங்கைத் திருநாட்டை கட்டி எழுப்ப வேண்டும். இதுவே இன்று எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.