ராஜபக்ஷ அரசாங்கம் என்னை பழிவாங்கியுள்ளது: தமிழ் உணர்வாளர் மோகன்
(கனகராசா சரவணன்)
அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது இருந்த போதும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு மே மாதம் 3 ம் திகதி இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 15 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (29) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இரவு 8.00 மணிக்கு வெளியில் விடப்பட்டபோது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
என்னிலை வந்தாலும் எங்கள் தமிழர் உணர்வாளர் அமைப்பு தன்னிலைமாறாது அடக்கு முறைக்கு எதிரான தார்மீக போராட்டம் நிச்சயமாக தொடரும்.ஏன் என்றால் 15 மாதங்கள் சிறையிலே நாங்கள் வாழப்பழகிக் கொண்டோம்.ஆகவே சிறைச்சாலை அடக்குமு றையை நாங்கள் எள்ளவு கூட கவலை கொள்ளப் போவதில்லை. எங்களுடைய தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழ் உணர்வாளர் அமைப்பு தொடர்ந்து செயற்படும் .
பயங்கரவாத தடைச் சட்டம் ராஜபக்ஷ அரசாங்கம் தங்களுடைய எதிரிகளை அடக்குவதற்காக தங்களுக்கு எதிரானவர்களை சிறையில் அடைப்பதற்காக அந்த சட்டத்தை கையாண்டு கொண்டிருக்கின்றனர். அது தான் நடந்து கொண்டிருந்தது இதுவரையும் .
எனவே, தற்போது எந்த சிங்கள அரசியல் தலைவர்கள் வந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது.அது தான் உண்மையான விடையம் என்றார் .
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் ஒருவருடத்தின் பின் விடுதலை
(கனகராசா சரவணன்)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில் வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் பிணையில் விடுதலை செய்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் விடுவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையதளங்களில் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை ஒரு இலச்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு ரொக்கப் பிணையிலும் பிணையில் விடுவித்துள்ளார்.