இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது அம் மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
அவர்களில் இரு மாணவர்கள் உயிர்தப்பிய நிலையில் கரை சேர்ந்ததுடன் மற்றுமொரு மாணவன் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தான்.
இவ்வாறு காணாமல் போன பெரிய நீலாவணை பகுதி 1ஐ சேர்ந்த 16 வயதுடைய இராசநாயகம் சனுஜன் என்ற மாணவனின் சடலம் புதன்கிழமை (27) மாலை கரை ஒதுங்கியுள்ளது.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சுமார் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவர்களே இவ்வாறு கடலில் சிக்கிக்கொண்டதுடன், கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடலில் நீச்சலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.