இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையில் தலைவர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.
“போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றினாலும், இலங்கை தொடர்ந்தும் தொடரை நடத்தும் உரிமையை தக்க வைத்துக் கொள்ளும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை, வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிந்தாலும், ஆசிய கிண்ணத் தொடர் பல அணிகள் பங்கேற்கும் போட்டி என்பதால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதை நடத்துவதில் பல சவால்கள் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் பேரவை கூறுகிறது.
“இரண்டு அணிகளை நடத்துவது என்பது பத்து அணிகளை நடத்துவது போன்றது அல்ல” என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா பத்து நாட்களுக்கு முன்னர் ESPNcricinfo விடம் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, “அனைவருக்கும் எரிபொருளுடன் கூடிய பத்து பேருந்துகளை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு அணிக்கும் எரிபொருளுடன் கூடிய போக்குவரத்து வேன் வழங்க வேண்டும், முகாமையாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும்.அனுசரணையாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், மின்பிறப்பாக்கிகள் மின்விளக்குகளை இயக்குவதற்கு எரிபொருளையும் தேட வேண்டும்” என்றார்.
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் என்பதால், போட்டியை நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் இருந்தன.
உட்கட்டமைப்பு மற்றும் பயணத்தின் அடிப்படையில், ஐக்கிய அரபு இராச்சியமாக சாதகமாக உள்ளது. ஆனால் ஆகஸ்ட் பிற்பகுதியிலும் செப்டம்பர் தொடக்கத்திலும் வெப்பநிலை, பொதுவாக 40 ° C ஐ விட அதிகமாக இருக்கும், இது வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.